கோலாலம்பூர், ஜூன் 3 – டெலோய்ட் (Deloitte) எனப்படும் கணக்காய்வாளர் நிறுவனத்தில் (Accounting firm) ஒரு பங்குதாரரான பிரதமர் நஜிப்பின் மகன் முகமட் நிசார் நஜிப் (படம்), தனது நிபுணத்துவ தொழிலில் சட்டத்தை மீறியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் நிச்சயம் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மலேசிய கணக்காய்வாளர்கள் மன்றம் (Malaysian Institute of Accountants – MIA) அறிவித்துள்ளது.
சீன நாளேடான சின் சியூ ஜிட் போ, இணைய அஞ்சல் வழி சமர்ப்பித்திருந்த கேள்விக்கு பதிலளிக்கையில் மலேசிய கணக்காய்வாளர் மன்றத்தின் தலைமை செயல் அதிகாரி ஹோ ஃபூங் மோய் “டெலோய்ட் நிறுவனத்தின் மீதான புகார்களை தற்போது விசாரித்து வருவதால் அது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்க முடியாது” எனக் கூறியிருக்கின்றார்.
இருப்பினும் எங்களின் உறுப்பினர்கள் யாராவது சட்டத்தை மீறி செயல்பட்டிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எங்களின் மன்றம் தயங்காது என்றும் அவர் மேலும் தெரிவித்திருக்கின்றார்.
நஜிப்பின் மகன் முகமட் நிசார் இந்த டெலோய்ட் நிறுவனத்தில் ஒரு பங்குதாரராவார்.
முகமட் நிசார் டெலோய்ட் நிதி ஆலோசனை நிறுவனத்தில் இயக்குநராக இருக்கின்றார் என்றும் அதனால், அந்த நிறுவனம் 1எம்டிபி நிறுவனக் கணக்குகளை தணிக்கை செய்ததில் தொழில் நிபுணத்துவ முரண்பாடுகள் (conflict of interests) இருக்கலாம் என்றும் பிகேஆர் உதவித் தலைவரான ரபிசி ரம்லி அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்தத் தகவல்களை சின் சியூ ஜிட் போ’வின் ஆங்கில இணைய செய்தித் தளம் வெளியிட்டிருக்கின்றது.