கோலாலம்பூர், ஜூன் 4 – மலிவு விலை விமான நிறுவனங்கள் மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அந்நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாகி முல்லர் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, ஏர் ஏசியா நிறுவனம் மாஸிற்கு தனது ஆதரவை தெரிவிக்கும் வகையில், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஏர் ஏசியா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் கூறியிருப்பதாவது:-
“இரு நிறுவனங்களும் இணைந்து செயல்படுவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். எனினும், அந்த பேச்சுவார்த்தை இப்பொழுதுதான் முதல் கட்டத்தை எட்டி உள்ளது. செலவீனங்களைக் குறைக்கும் வகையில் இரு நிறுவனங்களும் இணைந்து பராமரிப்பு, பழுது பார்த்தல் மற்றும் ஒட்டுமொத்த விமான தேவைகளுக்காக நமது வட்டாரத்தில் ஒரு பவர் ஹவுஸ் அமைத்தால் மிகச் சிறந்த முயற்சியாக இருக்கும்.”
“இந்த தேவைகளுக்காக நாம் வெளிநாடுகளையோ அல்லது வேறு தனியார் நிறுவனங்களையோ நாடுவதற்கு பதிலாக மலேசியாவிலேயே அதனை அமைத்துக் கொண்டால் பல செலவுகளைக் கட்டுப்படுத்த முடியும். நமது தேவைகள் மட்டுமல்லாது வேறு நிறுவனங்களுக்கும் விமான பராமரிப்பு, பழுது பார்த்தல் போன்ற சேவைகளை வழங்கி வருவாயை ஈட்ட முடியும்.”
“இதுமட்டுமல்லாமல், விமான நிலையத்தில் விமானங்களை கையாளுதல், சரக்கு விமானங்களின் சேவைகள் மற்றும் இன்னும் பிற பிரிவுகளிலும் ஏர் ஏசியா மாஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.