Home நாடு மலேசியாவில் தொல்காப்பிய மன்றம் –  கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முனைவர் மு.இளங்கோவன் பங்கேற்பு

மலேசியாவில் தொல்காப்பிய மன்றம் –  கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முனைவர் மு.இளங்கோவன் பங்கேற்பு

977
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூன் 4 – தமிழின் கருவூலமான ‘தொல்காப்பியத்தின்’ சிறப்புகளை இளைய தலைமுறைக்குப் பரப்பும் நோக்கில், மலேசியத் தமிழ்நெறி வாழ்வியல் இயக்கத்தின் சார்பில் நேற்று புதன்கிழமை இரவு மலேசியாவில் தொல்காப்பிய மன்றம் தொடங்குவது குறித்தும், இலக்கியங்கள் குறித்தும் கலந்துரையாடும் நிகழ்ச்சி கிள்ளான் தாமான் பெர்க்கிலியில் உள்ள பெர்க்கிலி உணவக மண்டபத்தில் நடைபெற்றது.

Elangovan Mu Puthucheri photoஇந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகப் புதுச்சேரியிலிருந்து வருகை தந்துள்ள முனைவர் மு.இளங்கோவன் (படம்) தொல்காப்பிய மன்றம் தொடங்குவது குறித்த கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

டாக்டர் மு.இளங்கோவன், புதுச்சேரி அரசாங்கத்தின் கீழ் செயல்படும்  முதுகலைப் பட்டங்களுக்கான கே.எம்.சென்டரில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார்.

#TamilSchoolmychoice

இன்றைய இலக்கியப் போக்குகள் குறித்தும் கலந்துரையாடலும் நேற்றைய நிகழ்ச்சியில் நடந்தேறியது.

தமிழ் ஆர்வலர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மலேசிய தொல்காப்பிய மன்றம் அமைப்பதில் ஆர்வம் கொண்டவர்கள், பங்களிப்பு செய்ய விரும்புபவர்கள் கீழ்க்காணும் பொறுப்பாளர்களைத் தொடர்பு கொள்ளலாம்.

அருள்முனைவர் 017 – 3315341

மாரியப்பனார் 012 – 3662286

மு.இளங்கோவன் – 010 – 4356866

தொல்காப்பிய மன்றம் – நோக்கமும் செயல்பாடுகளும்

தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூல் தொல்காப்பியமாகும். இந்த நூலில் இடம்பெற்றுள்ள மொழியியல் செய்திகள் உலக மொழியியல் வல்லுநர்களால் பெரிதும் வியந்து பார்க்கும் தரத்தில் உள்ளன. இந்த நூல் குறித்துத் தமிழறிஞர்களும், அயலகத்து அறிஞர்களும் பேராய்வுகளை நிகழ்த்தியுள்ளனர்.

தொல்காப்பியத்தை நடுவணாகக் கொண்டு தமிழாய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தொல்காப்பியத்தின் உண்மைப் பொருளையும் நுண்மைப் பொருளையும் காட்டும் வகையில் உரையாசிரியர்கள் உரைவரைந்துள்ளனர். தொல்காப்பியத்தை வழிமொழிந்து பல இலக்கண நூல்கள் தமிழில் வந்துள்ளன. தொல்காப்பியம் பிறமொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தொல்காப்பியம் பாடநூலாகக் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தொல்காப்பியம் குறித்த ஆய்வுகள், பதிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

உலக அளவிலான தொல்காப்பிய மன்றம் அமைக்கப்படும்

தொல்காப்பியம் குறித்த அனைத்துச் செய்திகளையும் திரட்டித் தரும் வகையிலும், தொல்காப்பியத்தைப் பரப்பும் நோக்கிலும் தொல்காப்பியம் குறித்த ஆய்வுகளை உலக அளவில் நடத்தும் வகையிலும், உலகெங்கும் உள்ள தொல்காப்பிய ஆய்வறிஞர்கள், பற்றாளர்கள், இலக்கிய, இலக்கண ஆர்வலர்களை ஒன்றிணைக்கும் வகையில் தொல்காப்பிய மன்றம் என்ற உலக அளவிலான அமைப்பினைத் தொடங்க முடிவுசெய்து அதற்குரிய முதற் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இலண்டன் அல்லது பிரான்சில் தலைமையிடம்

தொல்காப்பிய மன்றம் இலண்டன் அல்லது பிரான்சைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட உள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் தொல்காப்பிய மன்றத்திற்குரிய கிளைகள் தொடங்கப்பட்டுத் தக்க ஆய்வறிஞர்களால் வழிநடத்தப்பட உள்ளன. தமிழ் கற்ற, மொழியியல் கற்ற அறிஞர்களுக்கு மட்டும் உரியதாக இருந்த தொல்காப்பியத்தைத் தமிழ் ஆர்வலர்கள், கணினி வல்லுநர்கள், பல்துறை அறிஞர்கள், மாணவர்கள், இளைஞர்களின் ஒத்துழைப்புடன் பரப்பத் திட்டமிட்டுள்ளோம்.

வ.சுப.மாணிக்கனாரின் கனவுத் திட்டம்

தொல்காப்பியச் செய்திகள் மக்கள் மனத்தில் இடம்பெறும்வண்ணம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பணிகளைச் செய்யத் தன்னார்வலர்களை ஒன்று திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளோம். தொல்காப்பியப் பரவலுக்குக் குரல்கொடுத்தவர் மூதறிஞர் செம்மல் வ.சுப.மாணிக்கனார் ஆவார். அவர்களின் கனவை நனவாக்கும் வகையில் பல்வகைத் திட்டங்களைக் கொண்டு தொல்காப்பிய மன்றம் செயல்பட உள்ளது.

ஆண்டுதோறும் தொல்காப்பியம் குறித்த மாநாடுகள் நடத்தித் தொல்காப்பிய ஆய்வினை வளர்த்தெடுப்பது தொல்காப்பிய மன்றத்தின் முதன்மை நோக்கமாகும். மேலும் தொல்காப்பியப் பதிப்புகள், தொல்காப்பிய ஆய்வறிஞர்கள், தொல்காப்பியம்  குறித்த கட்டுரைகள், தொல்காப்பிய மொழிபெயர்ப்புகள் என அனைத்து விவரங்களையும் ஒன்று திரட்டி இணையத்தில் உலகத் தமிழர்களின் பயன்பாட்டுக்கு வைப்பது என்னும் நோக்கில் செயல்பட உள்ளோம்.

சீனி நைனா முகம்மது பெயரில் உலக விருது

தொல்காப்பிய ஆய்வில் ஈடுபட்டவர்களையும், தொல்காப்பியப் பரவலில் துணை நின்றவர்களையும் அடையாளம் கண்டு அறிஞர்கள் குழு ஒவ்வொரு ஆண்டும் பரிந்துரை செய்யும். அதன் அடிப்படையில் மலேசியாவில் வாழ்ந்த தொல்காப்பிய அறிஞர் சீனி நைனா முகமது அவர்களின் பெயரில் உலக அளவிலான விருது வழங்கிப் போற்றுவதும் தொல்காப்பிய மன்றத்தின் நோக்கங்களுள் ஒன்றாகும்.

தமிழார்வமும் இலக்கண, இலக்கிய ஈடுபாடும் உள்ள வினையாண்மை மிக்க தமிழார்வலர்களை- தொழில்நுட்ப வல்லுநர்களை- பல்துறை அறிஞர்களை  எங்களுடன் இணைந்து பணிபுரிய அன்புடன் அழைக்கின்றோம். தொல்காப்பிய மன்றம் தொடங்குவதற்குரிய தங்களின் மேலான கருத்துகளையும், வழிகாட்டல்களையும் எதிர்பார்க்கின்றோம். தொல்காப்பிய நூலில் புலமையும், தமிழ்மொழி வளர்ச்சியில் ஆர்வமும்கொண்ட அறிஞர்கள் நெறியாளர்களாக இருந்து இம்மன்றத்தை நெறிப்படுத்தி வளர்க்க உள்ளனர்.

உலக நாடுகளில் உள்ள தொல்காப்பிய ஆர்வலர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். தொல்காப்பியத்தைப் பரப்பவும், தொல்காப்பிய ஆய்வுகளை முன்னெடுக்கவும், தொல்காப்பியம் குறித்த செய்திகளைத் திரட்டவும் ஆர்வமுடைய பெருமக்கள் – தமிழ்த்தொண்டர்கள் எங்களைத் தொடர்புகொள்ளும்படி மெத்தப்பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புக்கு:

muelangovan@gmail.com

kambane2007@yahoo.fr