மதுரை,ஜூன் 4- விபத்தில் மூளைச் சாவு ஏற்பட்டு உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட இளைஞரின் இதயமும் கல்லீரலும் மதுரையில் இருந்து சென்னைக்கு உடனடியாக விமானத்தில் கொண்டு வரப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா கொலுஞ்சிப்பட்டியைச் சேர்ந்தவர் தமோதரன். வயது 29. அந்தப் பகுதியில் தேநீர் மற்றும் குளிர்பானம் விற்கும் கடை நடத்தி வந்தார்.
வியாபார நிமித்தமாக இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது கனரக வாகனம் மோதி, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனளிக்காமல் மூளைச் சாவு அடைந்தார்.
மருத்துவர்களின் ஆலோசனைப் படி அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவர்கள் சம்பத்குமார், ரவிசந்திரன், கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் 20 மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சையின் மூலம் இதயம் மற்றும் கல்லீரலை அகற்றிப் பாதுகாப்பான பெட்டியில் வைத்து அவசர ஊர்தி (ambulance) மூலம் மதுரை விமான நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.
அங்கிருந்து விமானத்தின் மூலம் அவை சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்டன. இதற்கான விமானம் 18 நிமிடம் முன்னதாகப் பறக்க ஏர் இந்தியா விமான நிலையம் ஏற்பாடு செய்து கொடுத்தது.
இந்த இதயமும் கல்லீரலும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்குப் பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
சிறுநீரகங்கள் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இரண்டு பேருக்குப் பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு தற்போது எல்லாத் தரப்பு மக்கள் மத்தியிலும் பரவி வருவது ஆரோக்கியமான விசயமாகும்.அதிலும், உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதல் இடத்தில் இருப்பது பெருமைக்குரிய விசயமாகும்.