பெட்டாலிங் ஜெயா, ஜூன் 6 – பிகேஆர் ஆலோசகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் இருந்து மீண்டும் சிறை திரும்பியுள்ளார். அவர் தனது உடல் கோளாறுகளுக்குச் சுங்கை பூலோ சிறையில் இருந்தபடியே சிகிச்சை பெற உள்ளார்.
“இறைவனுக்கு நன்றி. நான் மருத்துவமனையில் இருந்து வெளியேற மருத்துவர் அனுமதித்துள்ளார். எனது மருத்துவப் பரிசோதனைக்கான முடிவுகள் தெரிய வரும் வரை சுங்கை பூலோ சிறையில் எனக்கான சிகிச்சையைத் தொடர்வேன்,” என வெள்ளிக்கிழமை டுவிட்டர் பதிவொன்றில் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளும் பொருட்டு கோலாலம்பூர் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு என்டோஸ்கோபி எனப்படும் உடலின் உட்பகுதியை நுண்துளையின் மூலம் பரிசோதிக்கும் பரிசோதனை நடைபெற்றது.
இந்நிலையில் மருத்துவமனையில் தனது கணவரைக் கண்டபோது அவர் எலும்பும் தோலுமாக மெலிந்து காட்சியளித்ததாக அன்வாரின் மனைவி டத்தோஸ்ரீ வான் அசிசா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
உயர் ரத்த அழுத்தம் மற்றும் தோள் வலியால் அன்வார் இப்ராகிம் அவதிப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
ஓரினப் புணர்ச்சி வழக்கில் 5 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றுள்ள அன்வார், கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி முதல் அத்தண்டனையை அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.