Home நாடு சபா நிலநடுக்கம்: கினபாலு சிகர உச்சியில் 190 பேர் சிக்கியுள்ளனர்

சபா நிலநடுக்கம்: கினபாலு சிகர உச்சியில் 190 பேர் சிக்கியுள்ளனர்

1078
0
SHARE
Ad

குண்டாசாங், ஜூன் 6 – நேற்று சபாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, கினபாலு சிகரத்தின் உச்சியில் 190 பேர் சிக்கியுள்ளனர். இவர்களில் 40 பேரின் நிலை குறித்து எந்தத் தகவலும் தெரியவில்லை.

Mount Kinabalu

(கினபாலு மலை உச்சியின் அழகிய தோற்றம்…நிலநடுக்கத்திற்கு சில நாட்கள் முன்பாக கினபாலு மலை உச்சியை அடைந்த செல்லியல் வாசகி ஒருவர் எடுத்த பிரத்தியேகப் படம் இது) 

#TamilSchoolmychoice

மலையடிவாரப்  பகுதியான குண்டாசங்கில் உள்ள முகாமிற்கு இதுவரை 29 மலையேற்ற வீரர்கள் திரும்பியுள்ளதாகச் சபா காவல்துறை ஆணையர் டத்தோ ஜலாலுடின் அப்துல் ரகுமான் தெரிவித்தார்.

துருக்கியைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணி செமிஹா, மலையேற்றப் பயிற்சியாளர்கள் ரோபி சடிங்கா, ஜேம்ஸ் மைகோல் ஆகிய மூவரும் காலை 7.17 மணிக்கு நிகழ்ந்த நிலநடுக்கத்தின்போது படுகாயம் அடைந்ததாக அவர் மேலும் கூறினார்.

பனார் லபான், கண்டிங் லகடன் ஹுட், லபான் ரதா பகுதிகளில் உள்ள மூன்று ஓய்வு இல்லங்கள் மற்றும் விடுதிகள் மிக மோசமாகச் சேதமடைந்துள்ளன.

முன்னதாகச் சபா மாநில சுற்றுலா, கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் டத்தோ மசிடி மன்ஜுன் கூறுகையில், சபா பூங்கா வழிகாட்டிகள் மற்றும் ஊழியர்கள் என 38 முதல் 42 பேர் வரை மலையேற்ற வீரர்களுடன் மலை உச்சியில் சிக்கிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

அவர்கள் அனைவருக்கும் தேவையான உணவு மற்றும் உடைகளை அனுப்பி வைப்பதற்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், மலை உச்சிக்குச் செல்லும் பாதை பாறைகளால் தடுக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.

இதற்கிடையே மலை உச்சியில் கனமான மேகங்கள் சூழ்ந்து, பலத்த காற்றும் வீசுவதால் ஹெலிகாப்டர்கள் தரையிறங்க முடியவில்லை. மேலும் மீட்புப் பணியில் ஸ்மார்ட் (SMART) குழுவினர் இணைவதற்காகக் காத்திருப்பதாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.