கோலாலம்பூர், ஜூன் 5 – இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் கடந்த மூன்று மாதங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் – பன்முகக் கோணங்களில் – நடைபெற்று வரும் இந்தியத் திருவிழாவின் ஒரு பகுதியாக நேற்று இரவு மலேசிய தெலுங்கு சங்கத்துடன் இணைந்து கோலாலம்பூரில் உள்ள கிராண்ட் சீசன்ஸ் (Grand Seasons) தங்கும் விடுதியில் நடத்தப்பட்ட தெலுங்கு உணவு விழா விமரிசையாக நடந்தேறியது.
கூட்டரசுப் பிரதேச துணையமைச்சர் டத்தோ லோகா பாலமோகன் இந்த உணவு விழாவைத் தொடக்கி வைத்தார்.
ஜூன் 4ஆம் தேதி தொடங்கி, ஜூன் 14ஆம் தேதி வரை இந்த தெலுங்கு உணவு விழா நடைபெறும்.
குத்துவிளக்கேற்றி தெலுங்கு உணவு விழாவைத் தொடங்கி வைக்கின்றார் மலேசிய தெலுங்கு சங்கத் தலைவர் டத்தோ டாக்டர் அக்சய குமார் ராவ். அருகில் முன்னாள் துணை வெளியுறவு அமைச்சர் கோகிலன் பிள்ளை, லோகா பாலமோகன், இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி…
சிறப்பான தெலுங்கு உணவு வகைகளைச் சமைப்பதற்காக இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட இரண்டு சிறப்பு சமையல் கலை நிபுணர்களுடன் மேடையில் பிரமுகர்கள்…
தெலுங்கு உணவு விழாவைத் தொடக்கி வைத்து சிறப்புரையாற்றுகின்றார் கூட்டரசுப் பிரதேச துணையமைச்சர் டத்தோ லோகா பாலமோகன்…
நாவுக்கு சுவையான தெலுங்கு வகை உணவுகளின் பரிமாறல்களுக்கிடையில், கண்களுக்கும் விருந்து வைத்தனர் இந்த கதக் நடனக் கலைஞர்கள் – நிதின் ஷிராலே (இந்தியக் கலாச்சார மையத்தின் கதக் ஆசிரியர்) மற்றும் நேஹா மொண்டால் (சுவாரா கம்யூனிடி ஆர்ட்ஸ் சென்டரின் பரதநாட்டிய ஆசிரியை)
இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி சிறப்புரையாற்றுகின்றார். அவர் தமதுரையில் தங்களின் இந்திய விழாவை முன்னிட்டு அதன் ஓர் அங்கமாக நடைபெறும் தெலுங்கு உணவு விழாவிற்கு இணைந்து ஒத்துழைப்பு தந்த மலேசிய தெலுங்கு சங்கத்திற்கும் அதன் தலைவர் டத்தோ டாக்டர் அக்சய குமாருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இளைய வயதில் உணவுகள் தனது வாழ்க்கையில் எவ்வாறு ஒரு முக்கிய அங்கம் வகித்தது என்பது குறித்தும், ஒவ்வொரு காலகட்டத்திலும் – உதாரணமாக தேர்வு எழுதும் நேரங்களிலும், காலை வேளைகளிலும் எத்தகைய உணவு தனக்கு வழங்கப்பட்டது என்பது குறித்தும் சுவைபட எடுத்துக் கூறினார் இந்தியத் தூதர்.
தெலுங்கு உணவு விழா தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் ரஷியா, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளின் தூதர்களும் அடங்குவர்.
மலேசிய தெலுங்கு சங்கத் தலைவர் டாக்டர் அக்சய குமார் உரையாற்றுகின்றார். தனதுரையில் தெலுங்கு உணவு விழாவில் பங்கேற்க சங்கத்திற்கு வாய்ப்பளித்த இந்தியத் தூதரகத்திற்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்திற்கென உரித்தான சிறந்த உணவுகளைச் சமைத்துத் தர சமையல்கலை நிபுணர்களை இந்தியாவிலிருந்து குறுகிய கால அவகாசத்தில் வரவழைத்த இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டுக் குழுவினருக்கும் அவர் பாராட்டு தெரிவித்துக் கொண்டார்.
நிகழ்ச்சிக்கு இடையில் பரதநாட்டிய நடனத்தை வழங்கிய நேஹா மொண்டால்…
தெலுங்கு உணவு விழாவைத் தொடக்கி வைத்த துணையமைச்சர் டத்தோ லோகா பால மோகனுக்கு சிறப்பு செய்யப்படுகின்றது. அருகில் மலேசிய தெலுங்கு சங்கத் தலைவர் டாக்டர் அக்சய குமார், இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி….
படங்கள்: செல்லியல்