கோலாலம்பூர், ஜூன் 6 – இணையம் வேகமாக இருந்தாலும் சரி, வேகமாக இல்லாவிட்டாலும் சரி தனது பயனர்கள் தங்கள் தளத்தை விட்டு நீங்கி விடக் கூடாது என்பதில் பேஸ்புக் நிறுவனம் அதிக அக்கறை செலுத்தி வருகிறது. அத்தகைய எண்ணங்களின் மற்றுமொரு வெளிப்பாடு தான் ‘லைட்’ (Lite) செயலி.
ஆசிய நாடுகளை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலி இணையத்தின் வேகமோ அல்லது வைஃபையின் வேகமோ குறைவாக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும், தங்குதடையின்றி குறைந்த டேட்டாவில் நிறைவான சேவையை தரும். தற்போது முதற்கட்டமாக ஆசியாவில் மட்டும் வெளியிடப்பட்டுள்ள இந்த செயலி விரைவில் ஐரோப்பா மற்றும் இணைய வேகம் குறைவான ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளில் வெளியிடப்பட உள்ளது.
இது குறித்து பேஸ்புக் நிறுவனம் கூறுகையில், “இணைய வேகம் உலகம் முழுவதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. இதில் வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகள் என்ற விதிவிலக்குகள் இல்லை. வளர்ந்த நாடுகளிலும் கூட சில இடங்களில் இணைய வேகம் குறைவாக உள்ளது. அப்படி குறைவாக உள்ள தருணங்களில் பயனர்கள் பேஸ்புக்கின் அனைத்து வசதிகளையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.”
“அதற்கு தீர்வு காணவே இந்த செயலியை நாங்கள் உருவாக்கி உள்ளோம். 1 ‘எம்பி’ (MB)-க்கும் குறைவான டேட்டாவில் இந்த செயலியின் மூலம் பேஸ்புக்கின் ‘நியூஸ் ஃபீடு’ (News Feed), ‘ஸ்டேட்டஸ் அப்பேட்’ (Status Update) மற்றும் ‘நோட்டிஃபிக்கேஷன்’ (Notification) போன்றவற்றை பார்க்க முடியும்” என்று கூறியுள்ளது.