சிங்கப்பூர், ஜூன் 6 – சிங்கப்பூரில் தற்போதய சூழலில் ஓரினச்சேர்க்கை திருமணங்களை ஏற்றுக் கொள்ளும் மனநிலை இல்லை. பழமைவாய்ந்த இந்த சமூகம் அதற்கு இன்னும் தயாராகவில்லை என சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அயர்லாந்து ஓரினச்சேர்க்கை திருமணங்களை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க முடிவு செய்தது. இந்நிலையில், ஓரினச்சேர்க்கை திருமணங்கள் குறித்து சிங்கப்பூர் அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து லீ சியான் லூங்கிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியுள்ளதாவது:-
“அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் இவ்வகை திருமணங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. எனினும், அங்கும் ஒட்டுமொத்தமாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஒவ்வொரு மாநிலமாக அவை அங்கீகரிக்கப்பட்டு வருகின்றன.”
“அமெரிக்காவே இதில் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது, சிங்கப்பூர் பழமைவாதிகள் நிறைந்த சமூகம். அதனால் மக்கள் தற்போது வரை அதனை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை. இதில் மாற்றம் ஏற்படலாம். சிங்கப்பூரில் ஓரினச்சேர்க்கையாளர்கள் இருக்கின்றனர். அவர்கள் இங்கு மற்றவர்கள் போன்று சாதாரணமான வாழ்க்கையை எவ்வித அச்சுறுத்தல்களும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். எனினும், அவர்களுக்கான சட்டப்பூர்வமான அங்கீகாரம் தற்போது சாத்தியமில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.