Home நாடு இஸ்மாயில் சாப்ரியின் முதல் வெளிநாட்டுப் பயணம் சிங்கப்பூருக்கானதாக இருக்கலாம்

இஸ்மாயில் சாப்ரியின் முதல் வெளிநாட்டுப் பயணம் சிங்கப்பூருக்கானதாக இருக்கலாம்

912
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : பிரதமராகப் பதவியேற்ற பின்னர் இஸ்மாயில் சாப்ரி மேற்கொள்ள விருக்கும் முதல் வெளிநாட்டுப் பயணம் சிங்கப்பூருக்கானதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 22) இஸ்மாயில் சாப்ரியை தொலைபேசி வழி அழைத்த சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், இஸ்மாயில் சாப்ரிக்கு வாழ்த்துகள் தெரிவித்துக் கொண்டார். அவரின் தலைமைத்துவத்தின் கீழ் இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு தொடர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

சிங்கப்பூருக்கான அதிகாரத்துவ வருகை தரும்படியும் இஸ்மாயில் சாப்ரிக்கு லீ சியன் லூங் அழைப்பு விடுத்தார்.

#TamilSchoolmychoice

சிங்கப்பூருக்கும், மலேசியாவுக்கும் இடையில் தீர்க்கப்பட வேண்டிய அம்சங்கள் நிறைய இருப்பதால், சிங்கை பிரதமரின் அழைப்பைத் தொடர்ந்து இஸ்மாயில் சாப்ரியின் முதல் அதிகாரத்துவ வெளிநாட்டுப் பயணம் சிங்கப்பூருக்கானதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமராகப் பணிகளைத் தொடக்கிய இஸ்மாயில் சாப்ரி

இதற்கிடையில் நேற்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 23) இஸ்மாயில் சாப்ரி, புத்ரா ஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகமான புத்ரா பெர்டானாவில் தனது பணிகளை அதிகாரபூர்வமாகத் தொடக்கினார்.

காலை 8.25 மணியளவில் புத்ரா பெர்டானா வந்தடைந்த இஸ்மாயில் சாப்ரியை அரசாங்கத் தலைமைச் செயலாளர் முகமட் சுக்கி அலியும் மற்ற அதிகாரிகளும் வரவேற்றனர்.

கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி நாட்டின் 9-வது பிரதமராகப் பதவியேற்ற இஸ்மாயில் சாப்ரி, ஞாயிற்றுக்கிழமை  மாலை 5.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமராகத் தன் முதல் உரையை வழங்கினார்.