காலை 8.25 மணியளவில் புத்ரா பெர்டானா வந்தடைந்த இஸ்மாயில் சாப்ரியை அரசாங்கத் தலைமைச் செயலாளர் முகமட் சுக்கி அலியும் மற்ற அதிகாரிகளும் வரவேற்றனர்.
பிரதமரை வரவேற்றவர்களில், காவல் துறைத் தலைவர் அக்ரில் சானி, ஆயுதப் படைகளின் தலைவர் அபெண்டி புவாங், சட்டத் துறைத் தலைவர் இட்ருஸ் ஹாருண் ஆகியோரும் அடங்குவர்.
கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி நாட்டின் 9-வது பிரதமராகப் பதவியேற்ற இஸ்மாயில் சாப்ரி, நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமராகத் தன் முதல் உரையை வழங்கினார்.
இன்று காலை பணிகளைத் தொடங்கியிருக்கும் இஸ்மாயில் சாப்ரியின் முதற்கட்ட சவால் பணி புதிய அமைச்சரவையை உருவாக்குவதாகும். தன்னை ஆதரித்த கட்சிகளையும் திருப்திப்படுத்த வேண்டும், தான் சார்ந்திருக்கும் அம்னோவினரையும் திருப்திப்படுத்த வேண்டும் என்ற இக்கட்டான நிலைமையில் இஸ்மாயில் சாப்ரி இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.