கொழும்பு, ஜூன் 6 – இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வரவேண்டும் என்று அந்நாட்டின் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் சமல் ராஜபக் ஷேவிடம் மனு அளித்துள்ளனர்.
இலங்கையில் சிறிசேனா ஆட்சிக்கு வந்த பிறகு, முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே பிரதமராக நியமனம் செய்யப்பட்டார். அது முதல் ராஜபக்சே கட்சிக்கும், சிறிசேனா கட்சிக்கும் இடையே தொடர் சலசலப்புகள் இருந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று எதிர்க்கட்சியை சேர்ந்த 112 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணில் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
அதில், ரணில் விக்ரமசிங்கேவிற்கு 460 கோடி ரூபாய் கருவூல பத்திர முறைகேட்டில் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டி உள்ளனர். அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் விரைவில் இந்த விவகாரம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவித்தார்.
112 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணிலுக்கு எதிராக இருந்தாலும், 113 ஆளுங்கட்சி மற்றும் கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவாக உள்ளனர் என்று இலங்கை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், ராஜபக்சேவிற்கு எதிராக செயல்பட்டு வரும் ரணில் மற்றும் சிறிசேனா ஆகியோரில் யாரேனும் ஒருவரை செயல்பட விடாமல் தடுத்துவிட்டால், அனைத்து விவகாரங்களுக்கும் முற்றுப் புள்ளி வந்துவிடும் என ராஜபக்சே கருதுவதால், இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதில் எதிர்கட்சி அதிக முனைப்பு காட்டி வருவதாக இலங்கை அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.