செபாங், ஜூன் 6 – மாயமான எம்எச் 370 விமானத்தை தேடும் பகுதி மேலும் விரிவுபடுத்தப்படும். விமானம் கிடைக்கும் வரை தேடலைக் கைவிடப்போவதில்லை என போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் மேலும் 60 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு தேடுதல் நடவடிக்கை விரிவுபடுத்தப்பட உள்ளதாக அவர் கூறினார்.
விமானத்தை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அனைவரும் அதற்குரிய அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகக் குறிப்பிட்ட அவர், தேடுதல் நடவடிக்கை நிறுத்தப்பட்டதாக வெளியான தகவலை திட்டவட்டமாக மறுத்தார்.
“ஆஸ்திரேலியா, மலேசியா, சீனா இடையே நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையின்போது தற்போது 60 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் நடைபெற்று வரும் தேடுதல் நடவடிக்கையில் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை எனில், விமானம் தேடப்படும் பகுதியை மேலும் 60 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு விரிவுபடுத்துவது என முடிவு செய்துள்ளோம்.
“முதற்கட்டமாக, 60 ஆயிரம் கிலோமீட்டர் பரப்பளவில் நடைபெற்று வரும் தேடுதல் நடவடிக்கை தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது,” என்று கேஎல்ஐஏ 2 விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய லியோவ் கூறினார்.
எனினும் விமானத்தைத் தேடும் கடற்பகுதி விரிவுபடுத்தப்பட்ட பின்னரும் தேடுதல் நடவடிக்கையில் முன்னேற்றம் ஏற்படவில்லை எனில் அந்நடவடிக்கை நீடிக்காமல் போகலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் ஆஸ்திரேலியா, மலேசியா, சீனா ஆகிய மூன்று நாடுகளும் 1.2 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் விமானத்தை தேடும் நடவடிக்கைக்கு ஒப்புக்கொண்டன.
எனினும் தற்போதைய தேடும் நடவடிக்கையில் புதிய தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லையெனில் அந்த நடவடிக்கை நீட்டிக்கப்பட மாட்டாது என்றும் தேடும் பகுதி விரிவுபடுத்தப்பட வாய்ப்பில்லை என்றும் ஆஸ்திரேலிய அதிகாரிகள் கூறியதாக புதன்கிழமை தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.