கோலாலம்பூர், ஜூன் 6 – இந்தோனேசியாவில் இருந்து வரக்கூடிய வீட்டுப் பணிப்பெண்களுக்கான ஊதியத்தை உயர்த்துவது குறித்து மலேசியா இன்னும் முடிவு செய்யவில்லை.
இந்த விவகாரம் குறித்து ஆராய்ந்து வருவதாகவும், பல்வேறு கட்டங்களாக ஆலோசனை நடத்திய பிறகே உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் மனிதவள துணை அமைச்சர் இஸ்மாயில் முத்தாலிப் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்தோனேசிய வீட்டுப் பணிப்பெண்களுக்கு தற்போது வழங்கப்படும் 700 ரிங்கிட் ஊதியத்தை 1200 ரிங்கிட்டாக உயர்த்த வேண்டும் என அந்நாட்டு அரசு மலேசியாவிடம் பரிந்துரைத்திருந்தது.
இந்நிலையில் கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்மாயில் முத்தலிப், இந்தோனேசிய அரசு ஊதியத்தை உயர்த்துமாறு பரிந்துரை செய்துள்ள போதிலும், அது குறித்து முடிவேதும் எட்டப்படவில்லை என்றார்.
அதே வேளையில் இந்தோனேசிய அரசு பரிந்துரைத்துள்ள ஊதிய உயர்வு என்பது மிகவும் அதிகமாக உள்ளது என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
தற்போது மலேசியாவில் 146,993 பதிவுபெற்ற வீட்டுப் பணிப்பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்தோனேசியாவில் இருந்து வந்தவர்கள்.