சென்னை, ஜூன் 9 – விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவம் நடத்திய முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின் போது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியப் பொறுப்பாளரான எழிலன் சசிதரனை, திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி இராணுவத்திடம் சரணடையத் தூண்டியதாக எழிலனின் மனைவி ஆனந்தி பரபரப்பான புகாரைக் கூறியுள்ளார். கனிமொழியின் பேச்சைக் கேட்டுச் சரணடைந்த எனது கணவர் தற்போது வரை என்ன ஆனார் எனத் தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆனந்தி அளித்துள்ள பேட்டியில், “முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்ட போரின்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் திரிகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளரான எனது கணவர் எழிலன் சசிதரன், இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தார். சரணடைவதற்கு முன்னதாக எனது கணவர் கனிமொழியிடம் செயற்கைக்கோள் தொலைபேசியில் பேசினார். அவரின் தூண்டுதலின் பேரில் தான் எனது கணவர் சரணடைந்தார். ஆனால் அதன் பின்னர் இதுவரை அவரைக் காணவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
தனது கணவர் காணாமல் போனது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை அளித்துள்ள ஆனந்தி, இந்த விவகாரத்தில் தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என அவ்வப்போது போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் ஆனந்தி தம்மீது கூறிய குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக மறுத்துள்ள கனிமொழி, “எழிலன் சசிதரன் யார் என்றே எனக்குத் தெரியாது. அவரை நான் ஏன் சரணடையுமாறு கூற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “இந்திய அரசின் சார்பிலோ அல்லது இலங்கை அரசின் சார்பிலோ யாரையும் சரணடையச் சொல்லும் உரிமை எனக்கு இல்லை” என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, கனிமொழி மீதான ஆனந்தியின் புகார் ஈழத் தமிழர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கனிமொழி ஏன் சசிதரனைச் சரணடையத் தூண்ட வேண்டும். ராஜபக்சேவிற்கு எதிராகப் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றிய திமுக தலைவரின், மகள் இலங்கை இராணுவத்திற்கு ஆதரவான மன நிலையில் ஏன் செயல்பட வேண்டும் என்பது போன்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.