சென்னை: வேலூரில் நடக்க இருக்கும் இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்துக் கொள்ளவில்லை எனக் கூறப்பட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக அவர் கலந்து கொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே, தற்போது அதே கேள்விகள் கனிமொழி களம் இறங்காததது குறித்து எழுப்பப்பட்டு வருகிறது.
கடந்த மே மாதம் நடைபெற்ற மக்களவை தேர்தலின் போது, வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் இரத்தானது. இந்நிலையில் வரும் 5-ஆம் தேதி வேலூரில் தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
திமுக சார்பில் கதிர் ஆனந்த், அதிமுக கூட்டணி சார்பில் ஏசி சண்முகம் உள்ளிட்டோர் களத்தில் நிற்கின்றனர். இதனையொட்டி வேலூரில் தேர்தல் பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது.
திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால் கனிமொழி மட்டும் பிரச்சாரத்திற்கு வரவில்லை.
முன்னதாக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் கடந்த ஜூலை 30, 31 ஆகிய தேதிகளில் வேலூரில் கனிமொழி பிரச்சாரம் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும், அவர் வரவில்லை. அதோடுமட்டுமில்லாமல் மகளிர் அணி நிருவாகிகள் யாரும் அவ்விடத்தில் இல்லை என்று கூறப்படுகிறது.
இதனால் கனிமொழிக்கு முக்கியத்துவம் அளிப்பதை திமுக தலைமை தவிர்த்துவிட்டதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக பிரச்சார பட்டியலில் தனது பெயர் இடம்பெறாததைக் கண்ட கனிமொழி, உடனே துரைமுருகனிடம் இரு நாட்களைக் குறித்து கொடுத்துள்ளார்.
துரைமுருகன் கனிமொழிக்கு முக்கியத்துவம் தராதது ஏன் என்ற கேள்விகள் எழுகிறது. அவர் ஸ்டாலின் குடும்பத்தை பகைத்துக் கொள்ள விரும்பாததால், இப்படி கனிமொழியை தவிர்த்துவிட்டதாக வட்டாரங்கள் கூறுகின்றனர்.