கோலாலம்பூர்: எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஒரு சந்திப்புக் கூட்டத்தில் கலந்துக் கொண்டதாக பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் ஒப்புக் கொண்டார். இந்த சந்திப்புக் கூட்டம் பிரதமர் பதவி தொடர்புடையது என்று ஊகிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பல்வேறு நபர்களுடன் அடிக்கடி சந்திப்பதாகக் கூறிய பிரதமர் இந்த சந்திப்பினை சாதாரணமானது எனும் வகையில் விவரித்தார்.
அம்னோ மற்றும் காபுங்கான் பார்ட்டி சரவாக் (ஜிபிஎஸ்) தலைவர்கள் இருந்தார்களா என்பது குறித்து பிரதமர் மகாதீர் கூறுகையில், “அவர்கள் என்னைப் பார்க்க வந்தார்கள், அதனால் நான் அவர்களைச் சந்தித்தேன். அவர்கள் என்ன சொல்ல விரும்புகிறார்கள் என்று கேட்டேன். அவர்களில் நிறைய பேர் எனக்கு ஆதரவை வெளிப்படுத்தினர். மிக்க நன்றி.” என்று அவர் தெரிவித்தார்.
அக்கூட்டத்தில் பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி இருந்தாரா என்று கேட்கப்பட்டபோது, பிரதமர் “இது ஒரு இரகசிய சந்திப்பு, நான் உங்களுக்கு சொல்ல முடியாது.” என்று செய்தியாளர்களிடம் பதிலளித்தார்.
அண்மையில் வட்டாரம் குறிப்பிட்டதாகக் கூறி டி ஸ்டார் நாளிதழ், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு எதிர்க்கட்சித் தலைவர்கள் மகாதீரைச் சந்தித்ததாகக் குறிப்பிட்டிருந்தது.