கோலாலம்பூர், ஜூன் 10 – 1எம்டிபி நிறுவனம் பண மோசடிகளில் ஈடுபட்டதா என்பது குறித்துத் தமக்கு ஏதும் தெரியாது எனப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தெரிவித்துள்ளார்.
சில தரப்பினர் குற்றம் சாட்டுவது போன்று அவ்வாறு ஏதேனும் மோசடி நடந்திருக்குமானால், அதைப் பொதுக்கணக்குக் குழுவும், ஆடிட்டர் ஜெனரலும்தான் தங்களது அறிக்கைகளின் வழி வெளிக்கொண்டு வர வேண்டுமென அவர் கூறினார்.
“பண மோசடி நடந்ததா என எனக்குத் தெரியாது. எனினும் யாரேனும் அத்தகைய மோசடிகளில் ஈடுபட்டிருப்பது உறுதியானால், நிச்சயம் நீதியின் முன் நிறுத்தப்படுவர்,” என்றார் நஜிப்.
1எம்டிபி ஆலோசனை மன்றத்தின் தலைவரான அவர், அந்நிறுவனத்தில் பண மோசடி நிகழ்ந்துள்ளதாக எழுப்பப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் தனது அதிகாரப்பூர்வ இணையதளமான நஜிப்ரசாக்.கோம் மூலம் விளக்கமளித்துள்ளார்.
கடந்த வாரம் இவ்விவகாரம் குறித்துத் துன் மகாதீர் பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில், நஜிப்பின் விளக்கங்கள் வந்துள்ளன.
“இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். உடனடியாகப் பதில்கள் கிடைக்கவில்லை என்பதற்காக நாட்டின் தலைவர்களைப் பொறுப்புகளில் வெளியேற்றும் விதமாக, ஆரூடங்களையும், யூகங்களையும் பரப்பலாமா?
“எனக்கும் மிக விரைவில் விடைகள் தேவை. சரியான, சட்டப்பூர்வமான முறையில் உரிய தகவல்களை வழங்க அதிகாரிகளை அனுமதிக்கவில்லை எனில், யாரேனும் தவறு செய்திருக்கும் பட்சத்தில் அவர்கள் மீது எவ்வாறு நடவடிக்கை எடுக்க முடியும்?” என்று நஜிப் கேள்வி எழுப்பியுள்ளார்.