கோலாலம்பூர், ஜூன் 10 – தங்கள் அலுவலகத்திற்கு நாகரீக உடை அணிந்து வந்த பெண் ஒருவருக்கு, கட்டாயப்படுத்தி லுங்கி (sarong) வழங்கியதற்காக, சாலைப் போக்குவரத்து அலுவலகம் (ஜேபிஜே) மன்னிப்புக் கோரியது.
சூசனா ஜி.எல் டான் என்ற அந்தப் பெண் முட்டி தெரியும் அளவிற்கு, உடை அணிந்திருந்ததால், அவருக்குக் கைலி ஒன்றைக் கொடுத்து, அதை அணிந்து வரும் படி கட்டாயப்படுத்தியுள்ளது சம்பந்தப்பட்ட அலுவலகம்.
இந்நிலையில், அப்பெண் தனக்கு நேர்ந்ததை பேஸ்புக்கில் வெளியிட்டு நியாயம் கேட்க, தகவல் காட்டுத்தீயெனப் பரவி அலுவலகத்திற்கு எதிராகக் கண்டனங்கள் எழுந்தன.
அதனைத் தொடர்ந்து, நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஜேபிஜே, இப்படித் தான் உடையணிந்து வர வேண்டும் என்று கொள்கை எதையும் ஜேபிஜே பின்பற்றவில்லை என்றும், சூசனாவிற்கு ஏற்பட்ட சிரமத்திற்குத் தாங்கள் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் அறிவித்துள்ளது.