Home நாடு “சபா மருத்துவ மையங்கள் பாதுகாப்பு நிலைமை மறு ஆய்வு” – டாக்டர் சுப்ரா

“சபா மருத்துவ மையங்கள் பாதுகாப்பு நிலைமை மறு ஆய்வு” – டாக்டர் சுப்ரா

510
0
SHARE
Ad

சிகாமாட், ஜூன் 9 – கடந்த வெள்ளிக்கிழமையன்று ஏறத்தாழ 6.0 ரிக்டர் அளவில் சபா மாநிலத்தை உலுக்கிய நிலநடுக்கத்தின் அடிப்படையில், இறந்தவர்களுடைய 14 உடல்கள் சவப் பரிசோதனைக்குப் பின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களுடைய நல்லுடல்கள்  உற்றார் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

Datuk-Seri-Dr-S.Subramaniamநேற்று அவரது நாடாளுமன்றத் தொகுதியான சிகாமாட்டில் அரசாங்க இலாகாக்களோடு சிகாமாட் பொதுப்பணி துறை அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்புக் கூட்டத்திற்குத் தலைமையேற்றப் பின்னர் தொடர்ந்து நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்புக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் விளக்கமளித்தபோது, இதுவரையில் கண்டுப் பிடிக்கப்பட்டுள்ள சடலங்களில் 8 பேர் சிங்கப்பூர் நாட்டையும், 6 பேர் மலேசிய நாட்டையும் சார்ந்தவர்கள். மேலும், இன்னும் இருவரின் பிரேதப் பரிசோதனை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது. இதனைத்தவிர, முழுமையாக இல்லாத 8 உடல் பகுதிகளைத் தற்பொழுது சபாவில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். பிரேதப் பரிசோதனைக்குத் தேவையான உடற்கூறு தடயவியல் நிபுணர் சேவைகளையும் சுகாதார அமைச்சு தொடர்ந்து சபா மாநில மருத்துவமனைக்கு வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

இந்த திடீர் நிலநடுக்கத்தால் சபா மாநிலத்தில் உள்ள சில சுகாதார மையங்களும் மருத்துவமனையும் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக, ரானாவ் மருத்துவமனை, ரானாவ், கோதா பெலுட், துவாரான் ஆகிய வட்டாரங்களில் இருக்கக்கூடிய 4 சுகாதார சேவை மையங்கள், ஒரு பெண், குழந்தை நல சுகாதார மையம், 8 புறநகர் சுகாதார மையங்களும் இவற்றுள் அடங்கும்.

தற்பொழுது, இந்தச் சுகாதார மையங்களின் நிலை குறித்தும் அதன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் சுகாதார அமைச்சு பரிசோதனை செய்து வருகின்றது. பாதுகாப்பு கருதி சம்பந்தப்பட்ட மருத்துவ மையங்கள் பாதுக்காப்புடன் இருப்பது உறுதி படுத்தும் வரையில் அந்தச் சுகாதார மையங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது. மாறாக, அங்கு வழங்கக்கூடிய மருத்துவ சேவைகள் மற்ற இடங்களில் தொடர்ந்து வழங்கப்படும்.

கூடிய விரைவில், பொதுப்பணி இலாகா கொடுக்கக்கூடிய ஆலோசனைகளின் அடிப்படையில், குறிப்பிடப்பட்ட சுகாதார மையங்களில் தொடர்ந்து சேவை வழங்க இயலுமா அல்லது மற்ற இடங்களுக்கு அவை மாற்றம் செய்யப்படுமா என்பதை சுகாதார அமைச்சு முடிவு செய்யும் என சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும், சபா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தமது உற்றார் உறவினர்களையும் பரிகொடுத்தவர்களுக்கும், சுகாதார அமைச்சின் சார்பாக தமது ஆழ்ந்த அனுதாபங்களையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்வது மட்டுமின்றி அவர்களுடைய  ஆத்மா சாந்தியடைய தாம் இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துக் கொண்டார்.