சென்னை ,ஜூன் 10- சமூக வலைதளங்கள் என்றும் நட்பு ஊடகங்கள் என்றும் அழைக்கப்படுகின்ற முகநூல், டிவிட்டர், வாட்ஸ்அப் போன்றவற்றில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் மனதில் தோன்றுவதையெல்லாம் தங்கு தடையின்றி வெளியிட்டு வருகின்றனர்.
அதற்கு எந்தவிதமான தணிக்கையும் கிடையாது என்பது செளகரியமாகிவிட்டது.
தற்போது, அப்படிச் சிலர் வெளியிடும் தான்தோன்றித் தனமான கருத்துக்களால் பெரும் சர்ச்சைகளும் மோதல்களும் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில், சமூக வலைதளங்கள் பற்றி நகைச்சுவை நடிகர் விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
‘‘ஒரு பைத்தியக்காரன் கையில் துப்பாக்கி இருப்பதும், சமூக அக்கறை இல்லாதவர்களின் கையில் இணையதள அமைப்புகள் (பேஸ் புக், டுவிட்டர், வாட்ஸ் அப்) இருப்பதும் ஒன்று தான்.
இதுவெல்லாம் சமுதாயத்தில் பல சாதி–மத கலவரங்கள் ஏற்படுவதற்குக் கூட வழிவகை செய்துவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது.
எத்தனையோ உபயோகமான விசயங்கள் பரிமாறப்பட்டாலும், சில தவறான தகவல்களும் மக்களைச் சென்றடைகின்றன. இப்படியே போய்க் கொண்டிருந்தால், இதில் அரசு தலையிட்டு சமூக வலைதளங்களை மூடக்கூடிய நிலைமை ஏற்படலாம்’’.
சின்னக் கலைவாணர் விவேக் சமூக அக்கறையோடு சொல்லும் இந்தக் கருத்தைக் கேட்டாவது கண்ட கருத்தையும் வெளியிடுவதை நிறுத்துங்கள் மக்களே!