சென்னை, ஜூன் 10- ஏர்செல் – மேக்சிஸ் நிதி முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன், அவரது சகோதரர் கலாநிதிமாறன் ஆகியோருக்குச் சொந்தமான 742 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை மத்திய அமலாக்கத் துறை ஏப்ரல் மாதம் முடக்கியது.
சொத்து முடக்கத்தை நீக்கக் கோரி, மாறன் சகோதரர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில், சொத்து முடக்கத்தை நீக்க முடியாது எனக் கூறி நீதிபதி மனுவைத் தள்ளுபடி செய்துள்ளார்.
தி.மு.க.வைச் சேர்ந்த தயாநிதிமாறன் 2006ல் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, அவரின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, ஏர்செல் – மேக்சிஸ் முறைகேட்டில் ஈடுபட்டார் என்று அவர் மீதும்,அவரது சகோதரர் கலாநிதிமாறன் மீதும் அமலாக்க இயக்குநரகம் குற்றம் சாட்டியது.
முறைகேடு நடந்ததற்கான போதுமான ஆதாரங்கள் கிடைத்ததை அடுத்து, இருவரின், 742 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை முடக்கியும் அமலாக்க இயக்குநரகம் உத்தரவிட்டது.
அமலாக்கப் பிரிவால் முடக்கப்பட்ட 742 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை விடுவிக்குமாறு தயாநிதி-கலாநிதிமாறன் சகோதரர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கின் அடிப்படையிலேயே சன் தொலைக்காட்சி சொத்துக்களை அமலாக்கப்பிரிவு முடக்கி உள்ளது.
இது தொடர்பாக வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், சொத்துக்கள் முடக்கத்திற்குத் தடை விதிக்க முடியாது. வேண்டுமானால் சுப்ரீம் கோர்ட்டை அணுகலாம் எனக்கூறி மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.
சில நாட்களுக்கு முன் கலாநிதிமாறனுக்குச் சொந்தமான சன் குழுமத்தின் 33 தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கும் (channel) பாதுகாப்பு உரிமம் வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் சன் தொலைக்காட்சியின் உரிமம் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது.