Home கலை உலகம் திரைவிமர்சனம்: ‘ரோமியோ – ஜூலியட்’ – காதலில் ஏமாந்தவர்கள் வைக்கும் புதுமையான கோரிக்கை!

திரைவிமர்சனம்: ‘ரோமியோ – ஜூலியட்’ – காதலில் ஏமாந்தவர்கள் வைக்கும் புதுமையான கோரிக்கை!

912
0
SHARE
Ad

hansika 1கோலாலம்பூர், ஜூன் 12 – படத்தில் டி.ராஜேந்திரைப் பற்றிய காட்சிகள், பாடல்வரிகள் வைத்தது தொடர்பான பல பிரச்சனைகள், நீதிமன்ற வழக்கு என பல தடைகள் கடந்து இன்று வெற்றிகரமாக வெளியாகியிருக்கிறது ஜெயம் ரவி, ஹன்சிகா நடிப்பில் ‘ரோமியோ ஜூலியட்’ திரைப்படம்.

காதலில் ஆண்டாண்டு காலமாக இருந்து வரும்  பிரச்சனைகள் தான் படத்தின் மையக்கரு. இதே கருவை மையமாக வைத்து இதற்கு முன் பல படங்கள் வந்து நாம் பார்த்துப் பழகி விட்டோம். என்றாலும், ‘ரோமியோ ஜூலியட்’ படம் பார்க்கும் போது அந்த விறுவிறுப்பு குறையவே இல்லை என்றே சொல்லத் தோன்றுகின்றது.

காதல் என்பது எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் வருவது, கடைசி வரை இருப்பது என்பதை அழுத்தமாக புரிய வைக்கின்றது படம்.

#TamilSchoolmychoice

மெட்ராஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை, லஷ்மண் இயக்கியுள்ளார். டி இமான் இசையமைத்துள்ளார்.

கதை என்ன?

IMG_0867

பெண்களின் மீது பெரிதாக ஈர்ப்பு இல்லாமல் ஜிம்மே கதியாகவும், பிரபலங்களுக்கு  பயிற்சியளிப்பதே தொழிலாகவும் கொண்டிருக்கிறார் நம்ம ஹீரோ கார்த்திக் (ஜெயம்ரவி). கட்டுனா உலகப் பணக்காரனத் தான் கல்யாணம் கட்டுவேன் என்ற கொள்கையோடு வாழ்ந்து வருகிறார் ஏர்ஹோஸ்டஸ் ஐஸ்வர்யா (ஹன்சிகா).

இவர்களுக்கு இடையில் முதல் பார்வையிலேயே காதல் ஏற்படுகின்றது. ஜெயம்ரவியை பெரிய பணக்காரவீட்டுப் பையனாக நினைத்துக் கொண்டு காதலிக்கத் தொடங்கும் ஹன்சிகா ஒரு கட்டத்தில் அவர் சாதாரண ஜிம் பயிற்சியாளர் என்பதை அறிந்து விட்டு விலகுகிறார்.

மனமுடைந்த ஜெயம் ரவி எடுக்கும் முடிவுகளும், அதனால் ஹன்சிகா மனதில் ஏற்படும் மாற்றங்களும் தான் இரண்டாம் பாதிக் கதை.

தன்னை ஏமாற்றிய ஹன்சிகாவிடம் ஜெயம்ரவி வைக்கும் கோரிக்கை காலத்திற்கு ஏற்ப புதுமை. மிகவும் ரசிக்க வைத்தது.

நடிப்பு

IMG_7607

ஜெயம்ரவி நடிப்பு, நடனம் முகபாவனைகள் அனைத்தும் வழக்கம் போல் தூள். ஜிம் பயிற்சியாளராக கட்டுக்கோப்பாக ஸ்டைலாக இருக்கிறார்.

“ஐஸு நான் உன்ன நல்லாப் பாத்துக்குவேன். நீ என் கூட இருந்தா எதையும் சாதிப்பேன்” என்று உருகுவதும், “ஏண்டி காதலிச்ச பொண்ணு கல்யாணதுக்கு வந்து கூல்டிரிங்ஸ் எடுத்துக் குடுக்க நாங்க என்ன சூரியவம்சம் சரத்குமாரா?” என்று எகிறுவதுமாக நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

ஹன்சிகா … நடிப்பில் பெருமளவு தேறிவிட்டார். பலவகையான முகபாவனைகளை சில நொடி இடைவெளியில் மாற்றப் பழகிவிட்டார். ஏர்ஹோஸ்டசாக பெரிதாக ஈர்க்கவில்லை என்றாலும், இயல்பான நடிப்பாலும், படத்தில் அணிந்து வரும் விதவிதமான உடைகளாலும் ஈர்க்கிறார்.

படத்தில் விடிவி கணேஷ் முக்கியக் கதாப்பாத்திரத்தில் உண்மையான விடிவி கணேஷாகவே நடித்திருக்கிறார்.

கரகர குரலில், “நெக்ஸ்டைம் கிஸ் பண்ணும் போது ஹலோ சொல்லிட்டு குடுமா.. அங்க குடுக்குறது இங்க தெறிக்குது”, “ஆமாண்டா தம்பி அவ ஒரு ஐயிட்டம்” என கணேஷ் பேசும் வசனங்களுக்கும், காட்சிகளுக்கும் திரையரங்கில் பலத்த கைதட்டல்கள்.

இதுதவிர படத்தில் வம்சி கிருஷ்ணா, பூணம் பாஜ்வா ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.

படத்தில் பெரும்பாலான காட்சிகள் ஜெயம்ரவியையும், ஹன்சிகாவையும் சுற்றித் தான் நகர்கின்றது.

ஒளிப்பதிவு மற்றும் இசை

romeo-juliet

சௌந்தராஜன் ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச்சென இருக்கின்றன. தூவானம் பாடல் காட்சியின் ஒளிப்பதிவு அழகு.

வரிசையாக அழகழகான வீடுகள், சுத்தமான வீதிகள், கூட்டமில்லாத கோயில்கள் என காட்சிகளை அழகாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.

டி.இமானின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை தான் படத்திற்கு பக்க பலம்.

“டண்டனக்கா”, “அடியே அடியே”, “தூவானம்”, “இதற்குத்தானே ஆசைப்பட்டாய்” என பாடல்கள் அனைத்தும் ரசிக்க வைக்கின்றன.

ரசிக்க முடியாமல் போனவை

“டண்டனக்கா”, “அடியே அடியே” பாடல்கள் வெளிவந்த சில நாட்களிலேயே அதிக அளவில் வரவேற்பைப் பெற்றன.

அதனால் அப்பாடல் காட்சிகளுக்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. நடிகர் டி.ராஜேந்தரே தன்னைப் பற்றிய பாடல் காட்சிகளை நீக்கும் படி கூறியதால், மேலும் ஆர்வம் ஏற்பட்டது.

ஆனால் படத்தில் அக்காட்சி பெரிதாக ரசிக்கும் படியாக இல்லை. குறிப்பாக பாடல் காட்சியில் டி.ராஜேந்தரின் மேனரிசம், ஜெயம்ரவிக்கு எடுபடவில்லை.

இதற்கு முன் இப்படி ஒரு முயற்சி சரியாகப் பொருந்தியதற்கு உதாரணமாக ஒரு படம் உள்ளது. ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தில் நடிகர் கார்த்தி அப்படியே பிரபுவின் மேனரிசத்தைப் பின்பற்றியிருப்பார். அது அந்த பாடல் காட்சிக்கு அட்டகாசமாகப் பொருந்தியது.

அதேபோல், “அடியே அடியே” பாடல் காட்சியிலும் பாட்டின் அதிரடி இசைக்கு ஏற்ப நடனம் அமைக்கப்படவில்லை. உண்மையில் அந்தப் பாடல் காட்சியில் நடனம் மட்டும் சரியாக அமைந்திருந்தால், வடிவேலின் “வாடிப் பொட்டப் புள்ள” பாடல் வரிசையில் ரசிகர்களிடம் பெருமளவு வரவேற்பினைப் பெற்றிருக்கும்.

‘ரோமியோ ஜூலியட்’ என்று எதற்கு பெயர் வைத்தார்கள் என்றே தெரியவில்லை. காவியமாக சொல்லும் அளவிற்கு இதில் காதலும் இல்லை. ஆங்காங்கே இரட்டை அர்த்த வசனங்கள் தான் தூக்கலாக உள்ளது.

உதாரணமாக ஒரு காட்சியில், ஹன்சிகாவையும், மற்றொரு பெண்ணையும் ஒப்பிடுகிறார் ஜெயம்ரவி, அப்பெண்ணின் உதடை ‘மிட்டாய்’ என்றும், ஹன்சிகாவின் உதடை ‘பஞ்சுமிட்டாய்’ என்றும் வர்ணிக்கிறார். அப்படியே பார்வை அடுத்ததாகக் கீழ் இறங்குகின்றது.

இன்னொரு காட்சியில், எதையாவது பிடித்துக் கொண்டால் தான் எனக்கு ஃபீல் வரும் என்றும் கைகளை ஹன்சிகாவிடம் நீட்டுகிறார்.

இப்படியான கில்மா காட்சிகளும் படத்தில் உண்டு.

மற்றபடி, படம் முதல்பாதியில் ஏற்கனவே பார்த்துப் பழகிய காட்சிகளால் சற்று தொய்வடைந்தாலும், இரண்டாம் பாதியில் ஜெயம்ரவி வைக்கும் கோரிக்கையால் விறுவிறுப்பு கூடுகின்றது.

மொத்தத்தில் ரோமியோ ஜூலியட் –  ஏமாற்றிய காதலி முகத்தில் ஆசிட் வீச்சு, கத்தியால் குத்திக் கொலை இதையெல்லாம் தவிர்த்து, காதலித்து ஏமாந்தவர்கள் கேட்கும் புதுமையான கோரிக்கை!

 – ஃபீனிக்ஸ்தாசன்