கோலாலம்பூர், ஜூன் 15 – மஇகா தேசியத் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.சுப்ரமணியம், மறுதேர்தலுக்குத் தயாராகிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இன்று காலை மஇகா- சங்கப் பதிவிலாகா இடையிலான வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதில் சங்கங்களின் பதிவிலாகாவிற்கு எதிராக மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேல் தரப்பு தொடுத்திருந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், கேஎம்சிசி-யில் இன்று நடைபெற்ற 23-வது மலேசியத் தனியார் மருத்துவமனைகள் சங்கத்தின் அனைத்துலக ஆரோக்கிய பராமரிப்பு கருத்தரங்கில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய சுப்ரா, “ஆமாம் (நான் தயாராகிவிட்டேன்). எனக்கு ஏற்கனவே கூறிவிட்டார்கள். எனவே இனி எந்த தாமதமும் கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இது குறித்து சுப்ரா வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கையில், “2013-ம் ஆண்டு மஇகா தேர்தலில் முறைகேடுகளும், குளறுபடிகளும் நடந்துள்ளதாகக் கூறி சங்கப்பதிவிலாகா விடுத்த உத்தரவுகளை உயர்நீதிமன்ற நீதிபதி நிலைநிறுத்தியுள்ளது குறித்து நான் நிம்மதியடைந்துள்ளேன். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மஇகா-வில் நிலவி வந்த அரசியல் நிலையற்றதன்மையை இன்றைய தீர்ப்பு முடிவுக்கு கொண்டு வரும் என்று நம்புகின்றேன்.”
“கடந்த ஒன்றரை ஆண்டு கால குழப்பங்கள் மஇகா-வை இரண்டாகப் பிளந்துவிட்டது. தற்போது முன்னோக்கிச் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது. 2009 மத்திய செயலவை விரைவில் மஇகா மறுதேர்தலை நடத்தி, கட்சியை மீண்டும் அமைதி நிலைக்குக் கொண்டு வரும்” இவ்வாறு சுப்ரா தெரிவித்துள்ளார்.