Home நாடு நீதி வென்றது! இனி கட்சியை ஒன்றுபடுத்துவோம்! சமுதாயத் தொடர்பை வலுப்படுத்துவோம்” – டாக்டர் சுப்ரா அறைகூவல்

நீதி வென்றது! இனி கட்சியை ஒன்றுபடுத்துவோம்! சமுதாயத் தொடர்பை வலுப்படுத்துவோம்” – டாக்டர் சுப்ரா அறைகூவல்

571
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூன் 15 – கடந்த சில மாதங்களாக நீடித்துக் கொண்டிருந்த மஇகா-சங்கப் பதிவகம் இடையிலான நீதிமன்ற வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து, “கட்சியில் ஒற்றுமையை ஏற்படுத்துவோம். சமுதாயத்தோடு நமது தொடர்புகளை மேலும் வலுப்படுத்திக் கொண்டு சக்தியேற்றுவோம். கடந்த சில வருடங்களாகச் சிதைந்து கொண்டிருந்த நமது கட்சியின் தேவையை மீண்டும் உலகுக்கு உணர்த்துவோம்” என மஇகா தேசியத் துணைத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் அறைகூவல் விடுத்திருக்கின்றார்.

Datuk Seri Dr S.Subramaniam

நாடே ஆவலுடன் எதிர்பார்த்திருந்த வழக்கின் முடிவு வெளியிடப்பட்ட உடன் வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கையில் டாக்டர் சுப்ரா இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.

#TamilSchoolmychoice

அதேவேளையில் கட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் இந்த நீதிமன்ற வழக்கைத் தொடுத்த மஇகா தலைவர்கள் நடந்த குளறுபடிகளுக்கு பொறுப்பேற்க முன்வர வேண்டும் என்றும் சுப்ரா கேட்டுக் கொண்டிருக்கின்றார்.

அவர் மேலும் இன்று விடுத்த தனது பத்திரிக்கை அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

MIC-logo“2013 கட்சித் தேர்தலில் நிகழ்ந்த சட்டவிரோத நடவடிக்கைகள், தேர்தல் முறைகேடுகளைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம், சங்கப் பதிவகத்தின் முடிவுகளை மறு உறுதி செய்து, வழங்கியுள்ள தீர்ப்பு எனக்கு மிகுந்த நிம்மதியைத் தந்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மஇகாவைப் பீடித்திருந்த நிச்சயமற்ற அரசியல் சூழ்நிலைகளுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு முடிவைக் கொண்டு வந்திருப்பதாகக் நம்புகின்றேன்”.

வழக்கினால் கட்சி நடவடிக்கைகள் முடக்கம்

“இந்த வழக்கினால் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நாம் எந்தவித அரசியல், சமூக நடவடிக்கைகளிலும் தீவிரமாகப் பங்கெடுக்க முடியாமல் முடக்கப்பட்டோம். கட்சியும் இரண்டாகப் பிளவு கண்டது. இப்போது இவற்றையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு நாம் முன்னோக்கிச் செல்ல ஒரு நல்ல வாய்ப்பு அமைந்துள்ளதாகக் கருதுகின்றேன். நீதிமன்றம் அங்கீகரித்துள்ள 2009 மத்திய செயலவை உடனடியாக மஇகா தேர்தல்களை நடத்திக் கட்சியை மீண்டும் ஒழுங்கான, முறையான பாதைக்குச் செலுத்தப்பட வேண்டுமென்றும் விரும்புகின்றேன்”

g-palanivel_mic-300x198“மஇகா தேர்தலில் நிகழ்ந்த முறைகேடுகள், ஆதரவைப் பெருக்கிக் காட்டுவதற்காக சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கிளைகள் போன்ற விவகாரங்கள் குறித்து சில கட்சி உறுப்பினர்கள் செய்த புகார்கள் உண்மைதான் என்பது சங்கப் பதிவகம் நடத்திய விசாரணைகளின் வழி தெரிய வந்துள்ளது. இவை யாவும் அவசரம் அவசரமாக செய்யப்பட்ட முடிவுகள் அல்ல. மாறாக, சங்கப்பதிவகம் முழுமையான ஆய்வுகள் நடத்தி, சம்பந்தப்பட்ட எல்லா ஆவணங்களையும் பரிசீலித்து, சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தி அவர்களின் கருத்துகளையும் கேட்டறிந்து அதன் பின்னர்தான் தனது இறுதி முடிவுக்கு சங்கப் பதிவகம் வந்திருக்கின்றது”

புகார்தாரர்களின் நீதிப் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி

MIC Logo and Flag“கட்சியின் நன்மைக்காக, ஒட்டு மொத்த உறுப்பினர்களின் ஜனநாயக உரிமைக்காகப் புகார்களை சங்கப் பதிவகம் கொண்டு சென்று இறுதிவரை சளைக்காமல் நீதிக்காகவும் நியாயத்திற்காகவும் போராடிய புகார்தாரர்களுக்கு இறுதியில் நீதி கிடைத்திருக்கின்றது.”

“இந்த விவகாரங்களைப் பேச்சு வார்த்தைகளின் மூலமும், நமது மஇகா என்பது நமது குடும்பம் என்ற ரீதியில் வெளிப்படையான கருத்துப் பரிமாற்றங்கள், கலந்தாலோசனைகள், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை ஆகியவற்றின் மூலம் மிகவும் எளிதாக சமரசத்துடன் தீர்த்திருக்கலாம் என நான் ஆரம்பம் முதல் தொடர்ந்து குரல்கொடுத்து வந்திருக்கின்றேன். ஆனால் எனது அறைகூவல்களைக் கேட்க வேண்டியவர்கள் காது கொடுத்துக் கேட்க முன்வரவில்லை”

“இந்த விவகாரத்தை நீதிமன்றம் கொண்டு செல்வது நியாயமில்லை, அவசியமுமில்லை என்றும், கட்சி நலன் கருதியும், சமுதாய நலன் கருதியும் இது தவிர்க்கப்பட வேண்டுமென்றும் நான் தொடர்ந்து ஆட்சேபித்தும் வலியுறுத்தியும் வந்திருக்கின்றேன். ஆனால், எனது இந்த அணுகுமுறை சம்பந்தப்பட்டவர்களால் வரவேற்கப்படவில்லை”

“இந்தச் சூழ்நிலையில் நீதிமன்றத் தீர்ப்பை அனைவரும் அமைதியோடும், உணர்ச்சிவசப்படாமல் ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டுமென இந்தத் தருணத்தில் கேட்டுக் கொள்கின்றேன். இது வெற்றி விழாக் கொண்டாட்டமும் கிடையாது. மாறாக, நாம் சோகத்தில் ஆழ்ந்து போக வேண்டிய தருணமும் கிடையாது. அமைதியான, அதே சமயம் நிதானத்தோடு இத்தகைய முடிவுகளை ஏற்றுக்கொள்வதுதான் ஓர் உண்மையான, உயர்ந்த தலைமைத்துவப் பண்பின் அடையாளமாகும்.”

அப்பாவிக் கிளைத் தலைவர்கள் – வெறும் பார்வையாளர்கள்

“கடந்த சில மாதங்களாக கட்சி, நீதிமன்ற வழக்கால் இழுத்தடிக்கப்பட்டு வந்திருக்கும் நிலைமையை, தொடர்ந்து கொண்டிருந்த பிரச்சனைகளை, நமது 3,700க்கும் மேற்பட்ட கிளைத் தலைவர்களில் பெரும்பான்மையோர் ஏதுமறியாத வெறும் அப்பாவிப் பார்வையாளர்களாக அமைதியாக வெளியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு இதில் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றாலும், யார் மீது நம்பிக்கை வைத்து, தங்களின் தலைவர்களாகத் தேர்ந்தெடுத்தார்களோ, அவர்களே நமது கிளைத் தலைவர்களின்மீது  இந்த மோசமான நிலைமையைத் திணித்திருக்கின்றார்கள் என்பதுதான் நாம் அனைவரும் புரிந்து கொள்ளவேண்டிய உண்மை”

“நடந்தவை, கடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். இனியும் பிரிவினைகள், அணிகள் இன்றி நாம் அனைவரும் ஒன்றிணைவோம். கட்சியை ஒற்றுமைப்படுத்துவோம். சமுதாயத்தோடு நமக்கிருக்கும் தொடர்புகளுக்கு மேலும் சக்தியூட்டி, வலுவூட்டுவோம். நமது கட்சியின் தேவையும், அத்தியாவசியமும் கடந்த சில ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைந்து வந்துள்ள நிலையில் நமது முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் நாம் மீண்டும் எழுச்சியுடன் உயர்வோம். நடந்தவற்றைப் பின்னுக்குத் தள்ளி, ஒளிமிகுந்த எதிர்காலத்தைச் செதுக்குவதற்காக நான் அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம்”

“அதே சமயம் பாரம்பரியத்தையும், உன்னத வரலாற்றையும் கொண்ட நமது கட்சிக்கு இந்த வழக்கால் ஏற்பட்ட பின்னடைவுக்கும், பாதிப்புகளுக்கும் இந்த வழக்கிற்குக் காரணமான சில தலைவர்கள் கண்டிப்பாகப் பொறுப்பேற்க வேண்டும், பதிலளிக்க வேண்டும் என்றும் நான் வலியுறுத்த விரும்புகின்றேன்”

“இந்தத் தலைவர்கள், தங்களின் மனசாட்சிக்கு மதிப்பளித்து, மஇகா தலைவர்களுக்காக விடையளிக்க வேண்டிய கேள்வி இது! நேர்மையுடன் செய்வார்களா?”

-இவ்வாறு மஇகா தேசியத் துணைத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டாக்டர் சுப்ரா இன்று விடுத்த தனது பத்திரிக்கை அறிக்கையில் தெரிவித்திருக்கின்றார்.