Home நாடு “தீர்ப்பு ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி! ஒன்றுபட்டுக் கட்சியைப் பலப்படுத்துவோம்!” – டி.மோகன்

“தீர்ப்பு ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி! ஒன்றுபட்டுக் கட்சியைப் பலப்படுத்துவோம்!” – டி.மோகன்

656
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூன் 16 – நேற்று மஇகா-சங்கப் பதிவிலாகா இடையிலான வழக்கில் தொடக்க காலம் முதல், புகார்தாரர்களை ஒருமுகப்படுத்தி, சங்கப் பதிவிலாகா விரைந்து தேர்தல் முறைகேடுகள் புகார்களை விசாரிக்க வேண்டும் என்றும் முடிவை அறிவிக்க வேண்டும் என்றும் போராட்டம் நடத்தி வந்த முன்னாள் மஇகா இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ டி.மோகன், வழக்கிற்குக் கிடைத்திருக்கும் தீர்ப்பு ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி எனப் பாராட்டியிருக்கின்றார்.

T-mohan

மற்றொரு புகார்தாரரான டத்தோ என்.முனியாண்டியுடன், டி.மோகன்…

#TamilSchoolmychoice

“மஇகா தேர்தலில் ஏற்பட்ட முறைகேட்டிற்குத் தீர்வு காணாமல் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் அலட்சியம் காட்டி வந்ததன் விளைவாகவே கட்சியின் பிரச்சனை நீதிமன்றம் வரையில் சென்றது. இருப்பினும் மஇகாவுக்கும் சங்கப்பதிவிலாகாவுக்கும் இடையிலான வழக்கில் ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட்டு 2009-ம் ஆண்டு மத்தியசெயலவை செல்லும் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டு, ஒன்றுபட்டு, ஜனநாயகத்தோடு கட்சியைப் பலப்படுத்துவோம்” என  டி.மோகன் நேற்று விடுத்த அறிக்கையில் கேட்டுக்கொண்டார்.

2013இல் நடந்த தேர்தலில் தேசிய உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட டி.மோகன், தேர்தல் முறைகேடுகளை ஒருமுகப்படுத்தியதிலும், புகார்களைச் செய்த உதவித் தலைவர் மற்றும் மத்திய செயலவை உறுப்பினர்களை ஒழுங்குபடுத்தி, ஒருங்கிணைத்துப் போராட்டம் நடத்தியதிலும் முன்னணி வகித்தார்.

“இந்தியர்களின் உரிமைகளுக்கும், உணர்வுகளுக்கும் போராடும் தாய்க்கட்சியான மஇகா வில் ஏற்பட்ட தலைமைத்துவக் குறைபாட்டின் காரணமாகவே, கட்சிக்குள் குழப்பங்கள் தொடர்ந்தன. ஆனால் மிகவும் மோசமாக கட்சித் தேர்தலில் தில்லுமுல்லுகள் அரங்கேறியது ஜனநாயகத்திற்கு எதிரானது. கட்சியில் கிளை, தொகுதிகள் செயல்படாமல் இருந்தது முதல் மாநாடுகள், கூட்டங்கள் நடத்தப்படாதது வரை கட்சியின் அனைத்து செயல்பாடுகளும் முடங்கிப் போனதற்கு மஇகா தலைமையின் பலவீனமே காரணம். சமுதாயத்தின் தேவைகளை முன்னிறுத்திக் கட்சியின் நடவடிக்கைகள் இருக்க வேண்டுமே தவிர ஒரு சிலரின் சுயநலத்திற்காகவும், குடும்பத்திற்காகவும் இருக்கக் கூடாது” என்றும் மோகன் தனது அறிக்கையில் வலியுறுத்தி உள்ளார்.

“எங்களது நிலைப்பாட்டில் கட்சியைப் பலப்படுத்தவும் ,தேர்தலில் ஏற்பட்ட தில்லுமுல்லுகளுக்குத் தீர்வு காணவும், மறுதேர்தலை முறையாக நடத்தவும் வலியுறுத்தினோம். கட்சியின் மீது பற்றும் பாசமும் கொண்டவர்களோடு இணைந்து மஇகா வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த முனைப்புக் காட்டினோம். எந்த நிலையிலும் கட்சியில் பிளவை ஏற்படுத்த எண்ணம் கொள்ளவில்லை. மஇகா- வை வலுப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே நோக்கமாக இருந்தது என அவர் சுட்டிக்காட்டினார்.
மலாக்காவில் நடைபெற்ற மாநாட்டில் அரங்கேறிய உண்மைக்குப் புறம்பான நடவடிக்கைகளின் தொடர்பில் ஏற்பட்ட குழப்பங்களுக்குத் தீர்வு பிறந்து, உண்மை நிலைநாட்டப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து மறுதேர்தல் முறையாக நடத்தப்படுவதோடு, மஇகா வைப் பலப்படுத்தி, சமுதாயத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
கட்சியில் அரங்கேறிய அனைத்துப் பிரச்சனைகளுக்கும், குழப்பங்களுக்கும், டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும். வெட்ட வெளிச்சமாக இவரின் பலவீனமும், செய்த குளறுபடிகளும் வெளிப்பட்டு விட்டன. இனிமேல் எதையும் மறைக்கவோ, மாற்றிப்பேசவோ முடியாது” என்றும் டி.மோகன் தெரிவித்துள்ளார்.