புதுடில்லி, ஜூன்17- மலேசியாவையும் சிங்கப்பூரையும் ஒரு பாலம் இணைப்பதைப் போல், இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் விதமாக ஒரு பாலம் அமைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே வங்கதேசம், நேபாளம், பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளுக்குச் சாலைப் போக்குவரத்தைத் துவங்கியது இந்தியா. அதுபோல், இந்தியா-இலங்கை இடையேயும் சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது:
வங்கதேசம், பூடான், நேபாளம் ஆகிய நாடுகளுடன் மோட்டார் வாகன ஒப்பந்தம் கையெழுத்தாகி நடைமுறையில் உள்ளது. தற்போது இந்தியா-இலங்கை இடையே கடல் பாலம் அல்லது கடலுக்கு அடியில் சுரங்கப் பாதை அமைத்துச் சாலைப் போக்குவரத்தைத் துவக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தச் சாலைகள் வழியாக வாகனங்களும், பாலத்திற்குக் கீழே கப்பல்களும் செல்ல முடியும். ராமேஸ்வரத்தின் தனுஷ்கோடியில் இருந்து இலங்கை எல்லை வரை 23 கி.மீ., தூரம் உள்ளது. இடையே கடல் வழிப் பாலம் அமைப்பதால் இரு நாடுகளிடையேயான சாலைப் போக்குவரத்தும், தொடர்பும் மேம்பாடு அடையும். தற்போதைய நிலவரப்படி இந்தப் பணிகள் முடிவடைய ரூ.23,000 கோடி செலவாகும்.” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியா-இலங்கை இடையே சாலை மற்றும் ரயில் இணைப்புப் பாலங்களை அமைப்பதற்காக ஆசிய வளர்ச்சி வங்கியிடம் அறிக்கை சமர்ப்பித்து, இந்தியா உதவி கேட்டுள்ளது.
இலங்கையைத் தொடர்ந்து வடகிழக்கு மாநிலங்களில் இருந்து மியான்மர் வழியாகத் தாய்லாந்திற்குச் செல்லும் சாலைப் போக்குவரத்தையும் துவக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
95 வருடங்களுக்கு முன்னால் தேசியக்கவி பாரதி,“சிங்களத் தீவினிக்கோர் பாலம் அமைப்போம்; சேதுவை மேடிருத்தி வீதி சமைப்போம்” என்று தீர்க்கதரிசனமாகப் பாடி வைத்தார். அன்று அவர் கண்ட கனவு இன்று நனவாகப் போகிறது!