Home இந்தியா இருசக்கர ஓட்டுநர், பயணி இருவருக்கும் தலைக்கவசம் கட்டாயம்- தமிழக அரசு ஆணை!

இருசக்கர ஓட்டுநர், பயணி இருவருக்கும் தலைக்கவசம் கட்டாயம்- தமிழக அரசு ஆணை!

609
0
SHARE
Ad

helmetசென்னை, ஜூன் 18- மலேசியா ,சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருசக்கர ஓட்டுநரும் அவர் பின்னால் அமர்ந்து பயணிக்கும் பயணியும் கண்டிப்பாகத் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற சட்டம் கடுமையாகப் பின்பற்றப்படுகிறது.

ஆனால், இந்தியாவில் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற சட்டம் கடுமையாக்கப்படவில்லை. அதனால் பயணிகள் பெரும்பாலும் தலைக்கவசம் அணிவதில்லை. இதன் காரணமாக விபத்துக்குள்ளாகும் பயணிகள் உயிர் இழக்கும் அபாயம் அதிகரித்து வருகிறது.

இந்தியப் பொது மக்களிடமும் போதுமான பாதுகாப்பு விழிப்புணர்வு இல்லை. அதனால், தலைக்கவசம் அணிவதில் ஆர்வம் இல்லாமலும் அசட்டையாகவும் இருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

சட்டம் கடுமையாக்கப்பட்டால் ஒழிய, இத்தகையவர்கள் தலைக்கவசம் அணிய மாட்டார்கள் என்பது உறுதி.

இதுதொடர்பான பொதுநல வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன், தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியம் பற்றிக் கடந்த 8-ந் தேதி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார்.

அந்த உத்தரவில் அவர் கூறி இருந்ததாவது:-

50 சதவீதம் பேர் தலைக்கவசம் அணியாமலேயே இருசக்கர வாகனங்களை ஓட்டுகின்றனர். அனைவரது வாழ்வுரிமையையும் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கும் உள்ளது. ஆனால் தலைக்கவசம் அணியாததற்கு வெறும் அபராதங்களை மட்டுமே விதிப்பதால் பயன் ஒன்றும் ஏற்படவில்லை.

இருசக்கர வாகனம் ஓட்டுபவர் தலைக்கவசம் அணியாமல் பிடிபட்டால், அவர் தலைக்கவசம் வாங்கும் வரை அவரது ஓட்டுநர் உரிமம் உள்பட வாகன ஆவணங்களை முடக்க வேண்டும்.

இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர் வருகிற ஜூலை 1-ந் தேதியில் இருந்து கண்டிப்பாகத் தலைக்கவசம் அணிய வேண்டுமென்பதை, 18-ந் தேதிக்குள் உள்துறைச் செயலாளர், காவல்துறை ஆணையர் ஆகியோர் அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.

ஜூலை 1-ந் தேதியில் இருந்து  தலைக்கவசம்அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டினால், ஓட்டுநர் உரிமம் உள்பட அந்த வாகனத்தின் அனைத்து ஆவணங்களும் முடக்கப்படும் என்ற தகவலையும் அறிவிக்க வேண்டும்.

புதிய தலைக்கவசம் வாங்கி அதையும், அதற்கான தொகைச்சீட்டையும்( ரசீதையும்) காட்டிய பிறகு தான் அந்த ஆவணங்கள் திருப்பித்தரப்படும் என்பதையும் தகவலாக மக்களுக்குக் கூற வேண்டும்.

இந்த உத்தரவை 18-ந் தேதிக்குள் இரண்டு பேரும் நிறைவேற்றாவிட்டால் 19-ந் தேதி நீதிமன்ற விசாரணைக்கு இருவரும் ஆஜராக வேண்டியது இருக்கும்.

இவ்வாறு அவர் தனது உத்தரவில் கூறி இருந்தார்.

இதைத்தொடர்ந்து, இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் தலைக்கவசம் அணிவதை வருகிற ஜூலை 1-ந் தேதி முதல் கட்டாயமாக்கித் தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் நீதிபதி குறிப்பிட்ட அனைத்துத் தகவல்களும் உத்தரவாக்கப்பட்டுள்ளன.