கோலாலம்பூர், ஜூன் 18 – 6000 டன் ரோன்95 எண்ணெய் மற்றும் 22 பணியாளர்களுடன் மாயமானதாகக் கூறப்பட்ட மலேசியாவுக்குச் சொந்தமான எண்ணெய்க் கப்பல் கம்போடியா கடற்பகுதியில் புதிய வண்ணம் மற்றும் புதிய பெயருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்துக் கப்பற்படைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் அஜீஸ் ஜாபர் கூறுகையில், “நாங்கள் அந்தக் கப்பலைக் கண்டுபிடித்துவிட்டோம். ஆர்எம்எப் (Royal Malaysian Air Force), எம்எம்இஏ (Malaysian Maritime Enforcement Agency), ஆர்ஏஏஎப் விமானங்கள் (Royal Australian Air Force aircraft) அந்தக் கப்பலைப் பாதுகாப்பாக நாட்டிற்கு இழுத்துக் கொண்டு வர முயற்சிகள் செய்து வருகின்றன. அந்தக் கப்பல் வண்ணம் மாற்றப்பட்டு, வேறு பெயருடன் இருந்தது ” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கப்பலை வண்ணம் மாற்றி, பெயர் மாற்றியவர்கள் யார்? கப்பல் கடத்தப்பட்டதா? அதில் இருந்த ஊழியர்களின் கதி என்ன? போன்றவற்றிற்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. விரைவில் அது குறித்து விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மாக்னா மெரிடியன் செண்ட்ரியான் பெர்ஹாட் என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான அந்தக் கப்பலில் மொத்தம் 22 பணியாளர்கள் இருந்தனர். அவர்களில் 16 பேர் மலேசியர்கள், மற்றவர்கள் இந்தோனேசியா, மியான்மர் நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
கடந்த ஜூன் 11-ம் தேதி, இரவு 8.57 மணியளவில் மலாக்காவில் இருந்து மேற்குக் கடற்பகுதி வழியாகக் குவாந்தானுக்குச் சென்று கொண்டிருந்த கப்பல் தொடர்பிலிருந்து விலகி மாயமானது குறிப்பிடத்தக்கது.