Home தொழில் நுட்பம் மாயமான டோர்னியர் விமானத்தைத் தேட, அதிநவீன ரிலையன்ஸ் நீர்மூழ்கிக் கப்பல்!

மாயமான டோர்னியர் விமானத்தைத் தேட, அதிநவீன ரிலையன்ஸ் நீர்மூழ்கிக் கப்பல்!

550
0
SHARE
Ad

201506180116109839_Coast-Guard-Commander-Sharma-Information_SECVPFசென்னை,ஜூன் 18- காணாமல் போன டோர்னியர் விமானத்தைத் தேடுவதற்காக அதிநவீன தனியார் நீர்மூழ்கிக் கப்பல் வரவழைக்கப்படுகிறது என்று இந்தியக் கடலோரக் காவல்படைப் பொதுத் தலைவர் சத்திய பிரகாஷ் சர்மா கூறியுள்ளார்.

மூன்று விமானிகளுடன் காணாமல் போன அந்த டோர்னியர் விமானம், சென்னையின் தென் கிழக்குத் திசையில் 95 கடல் மைல் தூரத்திற்கும், சிதம்பரத்தில் இருந்து கிழக்கே 16 கடல்மைல் தூரத்திற்கும் இடைப்பட்ட வங்காள விரிகுடா கடல் பகுதியில் சுமார் 700 மீட்டர் ஆழத்தில் விழுந்திருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டது.

அதை உறுதி செய்யும் விதத்தில் அந்தப் பகுதியில் எண்ணெய்ப் படலம் மிதப்பதைக் விமானப்படையினர் கண்டனர். அதைத் தொடர்ந்து அங்கு தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 12 இந்திய கடலோரப் பாதுகாப்புப்படைக் கப்பல்களும், இந்தியக் கடற்படையின் 6 கப்பல்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.

#TamilSchoolmychoice

காணாமல் போன டோர்னியர் விமானத்தின் கருப்புப் பெட்டியிலிருந்து சமிக்ஞை கிடைத்ததால், மீட்புப்பணி வெற்றிகரமாக முடிந்துவிடும் என்று நம்பப்பட்டது.

ஆனால் அந்தச் சமிக்ஞை, தொடர்ச்சியாகக் கிடைக்காமல் விட்டுவிட்டுக் கிடைப்பதால் காணாமல் போன விமானம் விழுந்து கிடக்கும் இடத்தைத் துல்லியமாகக் கணிக்கும் பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையின் கடலோரப் பாதுகாப்புப் படையின் பொதுத் தலைவர் சத்திய பிரகாஷ் சர்மா கூறியிருப்பதாவது:

“விமானத்தைக் கண்டுபிடித்து மீட்கும் பணிக்கு, ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒலிம்பிக் கேன்யான் என்ற அதிநவீன நீர்முழ்கி ஆராய்ச்சிக் கப்பல் வரவழைக்கப்படுகிறது. தற்போது அது காகிநாடாவில் இருந்து புறப்பட்டுவிட்டது . நாளை காலையில் சம்பவ இடத்தில் அக்கப்பல் தனது பணியைத் தொடங்கும்.

இதில் உள்ள நிழற்படக்கருவிகள் மூலம் எடுக்கப்படும் படங்கள் துல்லியமாக இருக்கும். 5 கிலோமீட்டர் சுற்றளவு வரை நுண்ணாய்வு (ஸ்கேன்) செய்யும் திறன் கொண்ட கப்பல் அது. ஆயிரம் மீட்டர் ஆழத்திலும் சென்று அந்தக் கப்பலால் ஆய்வு செய்ய முடியும்.

காணாமல் போன வீரர்களின் குடும்பத்தினருக்கு இது இக்கட்டான காலமாகும். ஆனாலும் எங்களின் இந்தத் தேடுதல் பணி அவர்களுக்குத் திருப்தி அளித்துள்ளது.

தேடும் பணியில் காலதாமதம் ஏற்படுவதற்குக் கருப்புப் பெட்டியில் இருந்து சமிக்ஞை சரிவரக் கிடைக்காமல் இருப்பதுதான் காரணம். சமிக்ஞை தொடர்ந்து கிடைத்தால்தான் விமானம் விழுந்து கிடக்கும் இடத்தை உறுதி செய்ய முடியும்.

நீருக்கு அடியில் உள்ள நீரோட்டத்தின் காரணமாக இந்த நிலை ஏற்படக்கூடும். கருப்புப் பெட்டியில் இருந்து 30 நாட்கள் மட்டுமே சமிக்ஞை கிடைக்கும். ஆனால் கூடிய விரைவில் மீட்புப் பணியில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது” என்றார் அவர்.

எத்தனையோ அதிநவீனக் கருவிகள் உள்ள போதும், இயற்கையோடு போராடி வெற்றி பெறுவதில் எவ்வளவு சிரமங்கள் உள்ளது பார்த்தீர்களா?

மலேசிய விமானம் எம்எச் 370 காணாமல் போய் ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், இச்சம்பவமும் நீண்ட கேள்விக் குறியாக நீடிக்கிறது.