புதுடெல்லி, ஜூன் 22 – அனைத்துலக யோகா தினத்தை முன்னிட்டு டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மெகா யோகா தின நிகழ்ச்சியில் சுமார் 37 ஆயிரம் பேர் கலந்து கொண்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
முதல் அனைத்துலக யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. போர் காரணமாக ஏமனில் மட்டும் யோகா தினக் கொண்டாட்டம் இல்லை.
நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐநா தலைமையகத்திலும் நேற்று அனைத்துலக யோகாதினம் கொண்டாடப்படுகிறது. டைம்ஸ் சதுக்கத்தில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் சுமார் 30 ஆயிரம் பேர் கலந்து கொள்கொண்டு யோகா பயிற்சி செய்கிறார்கள்.
உலகம் முழுவதும் கோலாகலமாக யோகா தினத்தைக் கொண்டாடி வரும் வேளையில், யோகா நிகழ்ச்சியில் சாதனை புரிந்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது இந்தியா.
இந்தியாவில் 650 மாவட்டங்களிலும், உலகின் 193 நாடுகளில் ஏமன் தவிர 192 நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. அதன்படி, தலைநகர் டெல்லியில் ராஜ்பாத்தில் நேற்று மெகா யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி தலைமையில் சுமார் 37 ஆயிரம் மக்கள் கலந்து கொண்டனர்.
இது போல், அதிக அளவிலான மக்கள் ஒரே இடத்தில் கூடி யோகா செய்வது இது தான் முதல்முறையாகும். முன்னதாக கடந்த 2005-ஆம் ஆண்டு குவாலியரில் விவேகானந்தா கேந்திரத்தில் 29,973 பேர் ஒரே இடத்தில் கூடி யோகா செய்ததே மெகா சாதனையாகக் கருதப்பட்டது.
தற்போது அந்தச் சாதனையை முறியடித்து ராஜ்பாத் யோகா நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. ராஜ்பாத் யோகா நிகழ்ச்சியில் பிரபலங்கள், பாலிவுட் நட்சத்திரங்கள். பள்ளி மாணவர்கள், அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், சாமானிய மக்கள் என அனைத்துத் தரப்பினரும் கலந்துக் கொண்டனர்.
மோடி உட்பட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் வெள்ளை நிற உடையணிந்திருந்தனர். இந்த யோகா தின நிகழ்ச்சியில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கலந்து கொண்டார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘யோகா மிகவும் நல்லது. இதனை அனைவரும் பின்பற்ற வேண்டும்’ எனத் தெரிவித்தார்.
ராஜ்பாத் யோகா தின நிகழ்ச்சி பாதுகாப்பு பணியில் சுமார் 8 ஆயிரம் போலீசார் ஈடுபட்டிருந்தனர். கடந்த 14-ஆம் தேதி முதலே அப்பாதையில் போக்குவரத்து நெறிமுறைகள் அமல் படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தகக்து.