சென்னை, ஜூன் 22 – முதல்வர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று (ஜூன் 22) பிரச்சாரம் செய்கிறார். சென்னை, ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் முதல்வர் ஜெயலலிதா உள்பட 28 பேர் போட்டியிடுகின்றனர்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அமைச்சர்கள், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா இன்று (ஜூன் 22) அந்தத் தொகுதியில் பிரச்சாரம் செய்கிறார்.
இதற்கான ஏற்பாடுகள் விரிவாகச் செய்யப்பட்டுள்ளன. முதல்வரின் பிரச்சாரம் குறித்து அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், ஆர்.வைத்திலிங்கம், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினர்.
ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலையில் இருந்து இன்று பிற்பகலில் முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரத்தைத் தொடங்குகிறார்.
அதன் பிறகு காசிமேடு, சூரிய நாராயணச் செட்டி தெரு, வீரராகவன் சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, கிராஸ் சாலை சந்திப்பு, அருணாசலேஸ்வரர் கோயில் தெரு ஆகிய இடங்களில் வாக்கு சேகரிக்கிறார்.
இதைத் தொடர்ந்து, எண்ணூர் நெடுஞ்சாலை, மணலி சாலை, எழில் நகர் ஆகிய இடங்களில் வாக்கு சேகரித்து ஜெயலலிதா பிரசாரத்தை நிறைவு செய்ய உள்ளார்.
முதல்வரின் பிரசாரத்தையொட்டி தொகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 1000 போலீஸார் வரையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.