புதுடெல்லி, மார்ச் 7 – மலேசிய விமான நிறுவனமான ஏர் ஆசியா இந்தியாவின் டாடா குழுமத்துடன் இணைந்து குறைந்த கட்டணத்தில் உள்நாட்டு விமான சேவையை தொடங்க முடிவெடுத்தன.
இதற்கு அனுமதி வேண்டி இந்தியாவின் வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு கழகத்திடம் இந்நிறுவனம் மனு கோரியிருந்தது. இந்த மனுவை வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனம் ஏற்றுக் கொண்டு அனுமதி வழங்கியுள்ளது.
இந்திய அரசு அயல்நாட்டு முதலீடுகளை உள்நாட்டில் அனுமதிக்க கடந்த ஆறு மாதங்களுக்கு முன் நீண்ட ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தியது. அதன் முடிவில் அயல்நாட்டு முதலீடுகளை உள்நாட்டில் அனுமதிக்கலாம் என்று முடிவு செய்தது.
இதன்படி உள்நாட்டு விமான சேவையில் 49% அயல்நாட்டு முதலீடுகளுக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து தெளிவான விபரங்கள் தேவை என்று உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சர் அஜித் சிங் கூறியிருந்தார்.
மேலும், அரசின் இந்த நிலைப்பாடு இரு நாட்டு முதலீடுகளின் கூட்டு முயற்சிக்கும் பொருந்துமா என்ற ஐயப்பாடு இருந்தது. தற்போது ஏர் ஏசியாவிற்கு அனுமதி வழங்கியதன் மூலம் இந்நிலை தெளிவடைந்துள்ளது.
இந்த முடிவு குறித்து ஏர் ஆசியா நிறுவனத் தலைவர் டோனி பெர்னாண்டஸ், கூறுகையில், இந்த முடிவு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. எளிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கவும் இத்திட்டம் உதவும் என்று கூறினார்.
இது இவ்வாறு இருக்க இந்தியத் தொழிலதிபர் ஜி.ஆர்.கோபிநாத்தின் ஏர் டெக்கான் நிறுவனம் கோரியிருந்த உள்நாட்டு சேவைக்கான அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.