புதுடில்லி, ஜூன் 22- காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மகள் பிரியங்கா மற்றும் துணைத் தலைவர் ராகுல் மூவரும் திடீரென வெளிநாட்டிற்குப் புறப்பட்டு சென்றுள்ள நிலையில், ராகுலின் திருமணத்திற்காகவே மூவரும் வெளிநாடு சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்படி, சோனியா காந்திக்கும் ராகுல்காந்திக்கும் மத்திய அரசின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால், மத்திய அரசின் அழைப்பை நிராகரித்துவிட்டு, சோனியா காந்தியும் மகள் பிரியங்காவும் திடீரென வெளிநாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றனர். அவர்களைத் தொடர்ந்து, கட்சியின் துணைத் தலைவர் ராகுலும் தனியாக வெளிநாடு புறப்பட்டுச் சென்றார்.
எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், மூவரும் வெளிநாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல், “’விரைவில் நான் திருமணம் செய்யப் போகிறேன்; என்னுடைய இந்த முடிவால், தாய் சோனியா மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்; நான் திருமணம் செய்யப்போகும் பெண் யார் என்பதை அறிய, உங்களைப் போலவே என் தாயும் ஆவலுடன் இருக்கிறார்; விரைவில், உங்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிப்பேன்” என்று சொல்லியிருந்தார்.
ராகுல் தன் திருமணம் குறித்து வெளிப்படையாகப் பேசிய இரு மாதங்களில், குடும்பத்தோடு திடீரென வெளிநாட்டிற்குச் சென்றுள்ளதே பரபரப்புக்குக் காரணமாகும்.