கோலாலம்பூர், ஜூன் 23 – நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைத் தடுக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் பல்வேறு யோசனைகளைக் கையாண்டு வருகின்றன. அந்த வகையில் சாம்சுங் நிறுவனம் புதிய ‘டிரக்’ (Truck) மாதிரி ஒன்றை உருவாக்கி அதன் சோதனை ஓட்டத்தைக் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெற்றிகரமாக நடத்திக்காட்டியது. சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் இடங்களில் இந்த டிரக்குகளைப் பயன்படுத்தினால் விபத்துகள் குறைய வாய்ப்புள்ளதாகச் சாம்சுங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த டிரக்கில் அப்படி என்னதான் சிறப்பம்சம் உள்ளது என்று கேட்கத் தோன்றும். சாலை விபத்துகள் அதிகம் நடைபெறுவதற்கான காரணங்களில் மிக முக்கியமான ஒன்று, எதிரே வரும் வாகனங்களைக் கவனிக்காமல் விடுவது தான். இதற்குத் தீர்வுகாண சாம்சுங், இந்த அதி நவீன டிரக்கை வடிவமைத்துள்ளது. இந்த டிரக்கின் முகப்பில் நவீன கேமராவும், பின்புறத்தில் பெரிய எல்சிடி திரையும் பொருத்தப்பட்டுள்ளன.
கேமரா மூலம் எதிரே வரும் வாகனங்களைப் படம் பிடிக்கும் டிரக், அதனை நேரடியாகப் பின்புறம் உள்ள எல்சிடி திரையில் ஒளிபரப்பும். இதனால் டிரக்கிற்குப் பின்னால் வரும் வாகனங்கள், எதிரே வரும் வாகனம் குறித்து அறிந்து கொள்ள முடியும்.
இந்த டிரக்கின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், அதன் கேமராக்கள் பகலில் மட்டுமல்லாது இரவு நேரத்திலும் துல்லியமாகச் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது தான். தற்சமயம் இந்த டிரக்குகளை அர்ஜென்டினாவில் பிரபலப்படுத்த, சாம்சுங் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.
சாம்சுங் டிரக்கின் காணொளியைக் கீழே காண்க: