சென்னை, ஜூன் 23- ரஜினிகாந்த் பெயரைப் பயன்படுத்திக் கடன் வாங்கிய கஸ்தூரிராஜா மீது நடவடிக்கை எடுக்க ரஜினிகாந்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கடன் கொடுத்தவர் (financier) வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்குத் தொடர்பாக இரண்டு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் மற்றும் கஸ்தூரிராஜாவிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த எஸ்.முகுன்சந்த் போத்ரா, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
“சினிமா இயக்குனர் கஸ்தூரிராஜா, என்னிடம் கடந்த 2012-ஆம் ஆண்டு வந்து பல லட்ச ரூபாய் கடன் கேட்டார். அப்போது அவர், நான் நடிகர் தனுஷின் அப்பா.என் மகன் தனுஷ், நடிகர் ரஜினிகாந்தின் மகளைத் திருமணம் செய்துள்ளார். எனவே, என்னால் பணம் தர முடியவில்லை என்றாலும், தனது சம்பந்தி ரஜினிகாந்த் கொடுத்துவிடுவார் என்று எழுதிக் கொடுத்துவிட்டுப் பணம் வாங்கிச் சென்றார்.
பின்னர் அவர், கடன் தொகையைக் காசோலையாகத் திருப்பிக்கொடுத்தார். அந்தக் காசோலையை வங்கியில் செலுத்தியபோது அவரது வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்று திரும்பி வந்துவிட்டது.
இதையடுத்து அவர் மீது காசோலை மோசடி வழக்குத் தொடர்ந்தேன். பின்னர், ரஜினிகாந்த் வீட்டைத் தொடர்பு கொண்டு விவரம் சொன்னபோது, ‘பல பேர் ரஜினிகாந்த் பெயரைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர்; அதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது” என்று பதில் வந்தது.
இதனால், 2012-ம் ஆண்டு ரஜினிகாந்தின் பெயரைச் சொல்லிப் பணம் வாங்கி மோசடி செய்துவிட்டார் என்று கஸ்தூரிராஜாவுக்கு எதிராகக் காவல்துறையில் புகார் செய்தேன்.
என் புகாரை விசாரித்த காவல்துறையினர், இது ‘சிவில்’ பிரச்சினை என்று கூறி புகாரை முடித்து வைத்துவிட்டனர். இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன். உயர்நீதிமன்றமும், ‘சிவில்’ பிரச்சினை என்று கூறி மனுவை நிராகரித்துவிட்டது.
இதற்கிடையில், ‘மேன் ஹூன் ரஜினிகாந்த்’ என்ற இந்திப் படத்துக்குத் தடை கேட்டு உயர்நீதிமன்றத்தில் ரஜினிகாந்த் வழக்குத் தொடர்ந்தார். அப்போது, அந்த வழக்கில் என்னையும் ஒரு தரப்பாகச் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று மனு செய்தேன்.
அந்த மனுவில், ‘இந்தி மொழியில் எடுக்கப்படும் சினிமா படத்தினால் தன் பெயருக்குக் களங்கம் ஏற்படும் என்று சொல்லி இந்த வழக்கை ரஜினிகாந்த் தொடர்ந்துள்ளார். அதேபோல, அவரது பெயரைப் பயன்படுத்திக் கஸ்தூரிராஜா என்னிடம் பணம் பெற்றுள்ளார். இதனால், அவரது பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது’ என்று கூறியிருந்தேன்.
இதற்குப் பதிலளித்த ரஜினிகாந்த், ‘தன் பெயரைப் பயன்படுத்த யாருக்கும் அனுமதி வழங்கவில்லை’ என்று கூறியிருந்தார். இந்தப் பதிலை முன்பே அவர் தெரிவித்தி ருந்தால், கஸ்தூரிராஜா மீது நான் கொடுத்த புகாரை ‘சிவில்’ பிரச்சினை என்று காவல்துறையும் நீதிமன்றமும் முடிவு செய்திருக்காது.
மேலும், உயர்நீதிமன்றத்தில் நான் மனு செய்து பல மாதங்களாகி விட்டன. இதுவரை கஸ்தூரிராஜா மீது ரஜினிகாந்த் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளார்.
இதனால், ரஜினிகாந்தும், கஸ்தூரிராஜாவும் கூட்டுச் சேர்ந்து செயல்படுகின்றனரோ என்ற சந்தேகம் எழுகிறது. எனவே, தன்னுடைய பெயரைத் தவறாகப் பயன்படுத்திய தன் சம்பந்தி கஸ்தூரிராஜா மீது நடவடிக்கை எடுக்க ரஜினிகாந்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி ரவிசந்திரபாபு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ‘மனுவுக்கு இரண்டு வாரத்துக்குள் பதிலளிக்கும்படி ரஜினிகாந்த், கஸ்தூரிராஜா ஆகியோருக்கு வழக்குக் கடிதம் அனுப்ப உத்தரவிட்டார்.