புதுடெல்லி, ஜூன் 23 – அனைத்துலக யோகா தினத்தை முன்னிட்டு கடந்த 21–ஆம் தேதி டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மிகவும் பிரமாண்ட யோகா நிகழ்ச்சி நடந்தது. அதில் 37 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
வெளிநாட்டுத் தூதர்கள் 84 பேர் பங்கேற்றனர். இவை இரண்டும் புதிய கின்னஸ் சாதனையாக கருதப்பட்டது. பா.ஜ.க. அரசின் முயற்சியால் இந்தியாவின் பாரம்பரிய கலையான யோகா கலைக்குப் புத்துணர்ச்சி கிடைத்துள்ளது.
நாடெங்கும் கோடிக்கணக்கானோர் யோகா கற்கத் தொடங்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து மத்திய அரசு யோகா கலையை அனைவரும் பயன்படுத்தும் வகையில் ஒழுங்குபடுத்த முடிவு செய்துள்ளது.
இதற்காக யோகா குரு எச்.ஆர்.நாகேந்திரா தலைமையில் சிறப்புக்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் உள்ள சுவாமி விவேகானந்தா யோகா சமஸ்தானத்தின் தலைவராக இருக்கும் நாகேந்திரா, பிரதமர் மோடியின் பிரத்யேக யோகா குரு என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தலைமையிலான குழு யோகாவை ஒழுங்குபடுத்த அறிக்கை தயாரித்து வரும் செப்டம்பர் மாதம் மத்திய அரசிடம் கொடுக்கும். அந்த அறிக்கையின் அடிப்படையில் நாடு முழுவதும் யோகா கலை ஒழுங்குபடுத்தப்படும்.
குறிப்பாக கிராம மக்கள் யோகா கலையைத் திறம்படக் கற்க வழிவகை செய்யப்படும். யோகா செய்யும் முறைகளில் பலருக்கும் பல விதமான சந்தேகங்கள் உள்ளன. அவை அனைத்தும் தீர்த்து வைக்கப்படும்.
யோகா கலையை மேம்படுத்த எடுக்கப்படும் இந்த நடவடிக்கைகளுக்கு மத்திய அரசுக்கு ரூ.500 கோடி தேவைப்படும் என்று அமைச்சகம் கணித்துள்ளது. ரூ.500 கோடியில் வர உள்ள இந்தத் திட்டத்தின் மூலம் யோகாவை வளர்க்க மத்திய அமைச்சகம் தீவிர பரிசீலனையைத் தொடங்கியுள்ளது.