புது டெல்லி, ஜூன் 23 – இந்தியத் தலைநகர் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்த உலக யோகா தின கொண்டாட்டம் பற்றி உலக அளவில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கையில், இந்தியப் பிரதமர் மோடி மீது புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
யோகா தின நிகழ்வின் போது மோடி, தனது கழுத்தில் அணிந்திருந்த இந்திய தேசியக் கொடியை முகம் துடைக்கப் பயன்படுத்தினார். அவரின் இந்த செயலை பத்திரிக்கையாளர்கள் புகைப்படமாக எடுத்து பத்திரிக்கைகளில் வெளியிட்டனர். சமூக ஊடகங்களில் வேகமாக பரவிய இந்த புகைப்படத்தை கண்டு, மோடி தேசியக் கொடியை அவமதித்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது பல்வேறு பொது நோக்கர்களும், தேசியவாதிகளும் அவருக்கு எதிராக குற்றம்சாட்டி உள்ளனர்.
இது தொடர்பாக பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து இருந்தாலும், காவல் துறை ரீதியிலான புகாரோ அல்லது வழக்குகளோ பதிவு செய்யாமல் இருந்து வந்தது. இந்நிலையில் புதுச்சேரியை சேர்ந்த தலித் சேனா அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் சுந்தர் என்பவர் அவருக்கு எதிராக காவல் துறையில் புகார் செய்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
இது தொடர்பாக சுந்தர் கூறியதாவது:-
“வாட்ஸ்அப்பில் பிரதமர் மோடி, இந்திய தேசிய கொடியை கொண்டு முகம் துடிப்பதைக் கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். அவரின் இந்த செயல், நாட்டின் பெருமைக்குரிய தேசிய சின்னத்தை அவமதிப்பதாக உள்ளது” என்று கூறியுள்ளார்.
ஆரம்பத்தில் அவரின் புகாரை வாங்கிக் கொள்ள காவல் துறையினர் தயங்கினாலும், சுந்தரின் தொடர் வற்புறுத்தலால், அவர்கள் இந்த புகாரை பெற்றுக் கொண்டுள்ளனர். இந்நிலையில் வட மாநிலங்களிலும் மோடிக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருவதாகவும், விரைவில் வழக்குகள் பதிவு செய்ய வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
இதற்கிடையே, உலக யோகா தினம் மூலம் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள மோடியின் நற்செயல்களை பாராட்டாமல், அவர் செய்யும் சிறிய தவறுகளை பெரிதுபடுத்தி குற்றம் சாட்டுவது முறையல்ல என்று அவருக்கு ஆதரவாகவும் சமூக ஊடகங்களில் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.