Home கலை உலகம் கலைப்பயணம்: ஒட்டுமொத்த மலேசியக் கலைஞர்கள் சார்பில் பிரதமரிடம் மகஜர்!

கலைப்பயணம்: ஒட்டுமொத்த மலேசியக் கலைஞர்கள் சார்பில் பிரதமரிடம் மகஜர்!

739
0
SHARE
Ad

IMAG2942கோலாலம்பூர், ஜூன் 24 – மலேசியக் கலைத்துறையில், தமிழ்த் திரைப்படங்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் அண்மைய காலங்களில் அசுர வளர்ச்சியடைந்துள்ளன என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக மலேசிய இசைத்துறை அனைத்துலக அளவில் சென்று உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

ஆனால், மலேசியத் திரைப்படங்களிலும், இசை ஆல்பங்களிலும், தொலைக்காட்சிப் படங்களிலும் பணியாற்றி வரும் கலைஞர்கள் அவரவர் தகுதிக்கேற்ப வருவாயையோ, லாபத்தையோ பெற்றிருக்கிறார்களா? தமிழ்த் திரைப்படங்களுக்கென அரசாங்கம் ஒதுக்கும் மானியம் அவர்களுக்குச் சரியான வழியில் சென்று சேர்கின்றதா? இணையத்தளங்களிலும், யூடியூப், வானொலி போன்றவற்றில் பதிவேற்றப்படும் கலைஞர்களின் பாடல்களும், திரைப்படங்களும், குறும்படங்களும் அவர்களுக்கு முறையான காப்புரிமத் தொகையை (Royalty) ஈட்டித் தருகின்றதா? என்று கேட்டால் பெரும்பாலான கலைஞர்களின் பதில் இல்லை என்பது தான்.

அரசாங்கம் வழங்கும் மானியத் தொகைகள் எங்கே? முறையாக அந்தந்த ஊடகங்களின் வழி கிடைக்க வேண்டிய காப்புரிமத் தொகை எங்கே செல்கின்றது? போன்ற கேள்விகளுக்கு ஒரு மலேசியக் கலைஞராக நீங்கள் பதில் தெரிந்து கொள்ள விரும்பினால் வரும் ஜூன் 28-ம் தேதி பிட்டா (FIITA) ஏற்பாட்டில், கோலாலம்பூர் புத்ரா உலக வர்த்தக மையத்தில், டான்ஸ்ரீ கேவியஸ் தலைமையில் நடைபெறும் மாபெரும் கருத்தரங்கு மற்றும் மகஜர் வழங்கும் ‘கலைப்பயணம்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டியது அவசியம்.

#TamilSchoolmychoice

அடிப்படைத் தொழில்நுட்பக்கலைஞர்கள் முதல் இயக்குநர்கள் வரை மலேசியத் திரைப்படங்கள், இசை ஆல்பங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எனக் கலைத்துறையில் பணியாற்றும் அனைத்துக் கலைஞர்களுக்கும் பயனளிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி முற்றிலும் இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ செய்தியாளர்கள் சந்திப்பு கடந்த திங்கட்கிழமை செந்தூலில் நடைபெற்றது. இச்சந்திப்பில் ‘கலைப்பயணம்’ நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுவினரான ஒளிப்பதிவாளர் பூபாளன், இசையமைப்பாளர் சுந்தரா, பாடலாசிரியர் கோக்கோ நந்தா, இசையமைப்பாளர் குணா, பாடகி திலா லக்‌ஷ்மண், நடிகர் சசி அப்பாஸ், நடிகர் அகோந்தரன், நடிகர் லோகநாதன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து நிகழ்ச்சி குறித்து விளக்கமளித்தனர்.

ஆண்டுக்கு 20 மில்லியன் அரசாங்க மானியம்

இந்நிகழ்ச்சி குறித்து நடிகர் லோகநாதன் விளக்கமளிக்கையில், “நமது மலேசியக் கலைத்துறையில் தொலைக்காட்சி, சினிமா, இசைத்துறை ஆகியவற்றில் முழுநேரமாக சுமார் 3000 கலைஞர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களின் வருமானத்தை நம்பி சுமார் 25,000 குடும்பங்கள் இருக்கின்றன.

” நாடகங்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் அரசாங்கம் நமக்கு ஒதுக்கி வரும் மானியம் இதற்கு முன்பு வரை ஒழுங்காக இருந்தது. நாளொன்றுக்கு ஒன்றரை மணி நேர நிகழ்ச்சிக்கு அரசு 75,000 ரிங்கிட் மானியம் வழங்குகின்றது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விழாக்கால நிகழ்ச்சிகளையெல்லாம் சேர்த்தால் தோராயமாக ஆண்டுக்கு 20 மில்லியன் நிதி நமக்கு ஒதுக்கப்படுகின்றது. ஆனால் அது கடந்த ஆண்டு இந்த நிதி பாதியாகக் குறைக்கப்பட்டது. எதனால் குறைக்கப்பட்டது என்று இதுவரை எந்த ஒரு விளக்கமும் நமக்கு அளிக்கப்படவில்லை.”

“2015-ல் அம்மானியமும் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த வருமானத்தையே நம்பியிருக்கும் கலைஞர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அம்மானியத்தை அரசாங்கம் மீண்டும் வழங்க பிரதமரிடம் கோரிக்கை வைப்பது தான் இந்தக் கலைப்பயணத்தின் நோக்கம். இந்தத் திட்டம் குறித்து டான்ஸ்ரீ கேவியஸ் அவர்களிடம் கலந்தாலோசித்த போது, அவர் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிடம் இந்த மகஜரைக் கொண்டு சேர்க்க உதவுவதாகக் கூறினார். இந்த மாபெரும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதற்கான அனைத்துச் செலவுகளையும் டான்ஸ்ரீ கேவியஸ் அவர்கள் ஏற்றுக்கொள்கிறார். இதில் எந்தவித அரசியல் தலையீடும் இல்லை என்பதை உறுதியாகச் சொல்கிறேன். நமது கலைஞர்களுக்கு முற்றிலும் பயனளிக்கும் நோக்கம் கொண்ட ஒரு நிகழ்ச்சி” என்று தெரிவித்தார்.

அரசுக்கு எதிரான போராட்டம் அல்ல!

அவரைத் தொடர்ந்து பேசிய இசையமைப்பாளர் சுந்தரா, கோகோ நந்தா, திலா லக்‌ஷ்மன், சசி அப்பாஸ், அகோந்திரன் ஆகியோர், இந்நிகழ்ச்சி மலேசியக் கலைஞர்களுக்கு மிகவும் பயனளிக்கக் கூடியது என்றும், அரசாங்கத்திற்கோ, டிவி நிறுவனங்களுக்கோ எந்த வகையிலும் எதிரானது இல்லை என்றும் குறிப்பிட்டனர். மாறாக இது அரசாங்கத்திடம் கலைஞர்களின் நல்வாழ்விற்காக முறைப்படி வைக்கப்படும் ஒரு கோரிக்கை என்றும் தெரிவித்தனர்.

கலைஞர்களுக்கு பயனளிக்கும் நிகழ்ச்சிகள் 

இதனிடையே நிகழ்ச்சி அன்று நடைபெறவிருக்கும் நிகழ்வுகள் குறித்துப் பிட்டா தலைவர் பூபாளன் கூறுகையில், “இந்நிகழ்ச்சியை ஒரு ஃபிலிம் பெஸ்டிவல் (திரைப்படவிழா) போல் செய்யவுள்ளோம். முற்றிலும் இலவசமான இந்நிகழ்ச்சியில் மலேசியாவிலுள்ள அத்தனை கலைஞர்களும் பாரபட்சமின்றி கலந்து கொள்ளலாம். சுமார் 1500 பேர் வருவார்கள் என எதிர்பார்க்கின்றோம். அதற்கு மேல் வந்தாலும் சமாளிக்கும் வகையில் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றோம்.”

“நிகழ்ச்சியன்று ‘ஜார்னி ஆஃப் மலேசியன் இந்தியன் ஆர்ட் என்ற ஆவணப்படம் ஒன்றை ஒளிபரப்பவுள்ளோம். மலேசியச் சினிமா பற்றியும், இசைத்துறை பற்றியும் இரண்டு கருத்தரங்கு நடைபெறவுள்ளது. அதில் மலேசிய சினிமா சார்பில் நடுவராக அர்சான் முத்தாலிப்பும், இசைத்துறை சார்பில் சுந்தராவும் கலந்து கொள்ளவுள்ளனர். அதே நேரத்தில் டிஜிட்டல் மீடியாவின் மூலமாக எப்படி வருமானம் ஈட்டுவது என்ற பயிற்சி வகுப்பை டாக்டர் அசோகன் நடத்தவுள்ளார்.”

“மேலும், நிகழ்ச்சியில் உலக அளவில் சிறந்து விளங்கும் 5 மலேசியக் கலைஞர்களுக்கு விருதும், 20 மூத்த மலேசியக் கலைஞர்களுக்கு அன்பளிப்பும் வழங்கவுள்ளோம். இறுதியாக அத்தனை கலைஞர்கள் முன்னிலையில் டான்ஸ்ரீ கேவியஸிடம் பிரதமரிடம் கொண்டு சேர்க்கவுள்ள மகஜர் ஒப்படைக்கப்படும்” – இவ்வாறு பூபாளன் கூறினார்.

இது பொதுமக்களுக்கான நிகழ்ச்சி அல்ல. முற்றிலும் கலைஞர் மட்டுமே கலந்து கொள்ளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முன்அனுமதிச் சீட்டை 014 9791391 என்ற எண்ணுக்கு அழைத்துப் பெறலாம் அல்லது நிகழ்ச்சியன்று நேரடியாக வந்தும் அனுமதிச்சீட்டைப் பெற்றுக்கொள்ளலாம் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி, படங்கள்: ஃபீனிக்ஸ்தாசன்