Home நாடு இன்னொரு பல்டி : இன்று 2009 மத்தியச் செயலவையைப் பழனிவேல் கூட்டுகின்றார்!

இன்னொரு பல்டி : இன்று 2009 மத்தியச் செயலவையைப் பழனிவேல் கூட்டுகின்றார்!

678
0
SHARE
Ad

palanivel_787566198கோலாலம்பூர், ஜூன் 25 – மஇகாவில் நிகழ்ந்து வரும் அதிரடியான  பல்வேறு திருப்புமுனைகளில் ஒன்றாகக் கடந்த 2009இல் தேர்வு செய்யப்பட்ட மத்தியச் செயலவையின் கூட்டத்தை டத்தோஸ்ரீ ஜி. பழனிவேல் இன்று கூட்டியுள்ளார்.

இன்று மாலை 5 மணி அளவில் புத்ரா ஜெயா புல்மான் (Pullman) தங்கும் விடுதியில் இக்கூட்டம் நடைபெற உள்ளதாகத் தெரிகிறது. 2009 மத்தியச் செயலவையில் இடம்பெற்றுள்ள பழனிவேலின் ஆதரவாளர்களுக்கு மட்டுமே இக்கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், டத்தோ எம்.சரவணன் உட்பட பழனிவேல் அண்மையில் இடைநீக்கம் செய்த 15 மத்திய செயலவை உறுப்பினர்கள் இல்லாமலேயே இக்கூட்டம் நடைபெற உள்ளதாகப் பழனிவேல் தரப்புக்கு நெருக்கமான வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

#TamilSchoolmychoice

2009 மத்தியச் செயலவைக்கு மேலும் 9 புதிய உறுப்பினர்களைக் கட்சித் தலைவர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி பழனிவேல் நியமிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்தியச் செயலவைக்குக் கட்சியின் தேசியத் தலைவர் 9 உறுப்பினர்களை நியமிக்க மஇகா அரசியல் சாசன சட்டவிதி அனுமதிக்கிறது.

இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் கட்சித் தேர்தலை நடத்துவதற்கான தேதிகளும் தீர்மானிக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.

இன்றைய தினம் மஇகா கூட்டத்திற்காக மண்டபம் ஒன்று பதிவு செய்யப்பட்டிருப்பதாகப் புத்ரா ஜெயா புல்மான் தங்குவிடுதியில் விசாரித்தபோது தகவல் கிடைத்துள்ளது.

இத்தகைய கூட்டத்தை நடத்துவதன் மூலம், இறுதிக் கட்ட முயற்சியாக 2009 மத்திய செயலவையைத் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியும் எனப் பழனிவேல் தரப்பு நம்புகிறது.

2009 மத்தியச் செயலவையை அங்கீகரிப்பதன் மூலம், தற்போது நடந்து வரும் சட்டப் போராட்டத்தில் பழனிவேல் தரப்பு கடைசி நேர முயற்சி ஒன்றை மேற்கொண்டிருப்பதாக மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2009 மத்திய செயலவையே சட்டப்பூர்வமாகச் செல்லுபடியாகும் எனச் சங்கப் பதிவகம் தொடர்ந்து கூறி வரும் நிலையில், ஜூன் 15ஆம் தேதி கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், கட்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள 2009 மத்தியச் செயலவைக்கு மட்டுமே சட்டப்பூர்வ அதிகாரம் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2009 மத்தியச் செயலவைக் கூட்டத்தைக் கூட்டுவதன் மூலம் தாமே இன்னும் கட்சியின் தேசியத் தலைவராக நீடிப்பதாக வெளிக்காட்ட முயற்சிக்கிறார் பழனிவேல். மேலும் கட்சித் தலைவர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி 15 மத்தியச் செயலவை உறுப்பினர்களை நீக்கிய தனது உத்தரவு செல்லுபடியாகும் என்றும் 9 புதிய மத்தியச் செயலவை உறுப்பினர்களை நியமிக்க தனக்கு அதிகாரம் உள்ளது என்றும் சட்டரீதியாக நிரூபிக்க அவர் முயற்சி செய்கின்றார்.

இன்றைய கூட்டத்தில் டத்தோ சோதிநாதனைக் கட்சியின் தலைமைச் செயலாளராக அவர் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பழனிவேலின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் சட்டப்படி செல்லுபடியாகுமா அல்லது சங்கப்பதிவகம் இவற்றை உறுதி செய்யுமா? என்பது தனி விவகாரம்.

தடை உத்தரவு கோரும் பழனிவேல் மனுவுக்குப் பலத்த பின்னடைவு?

இந்நிலையில் திட்டமிட்டபடி நாளை 2009 மத்தியச் செயலவைக் கூட்டம் நடைபெறுமானால், அது கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் பழனிவேல் தாக்கல் செய்துள்ள இடைக்காலத் தடைகோரும் மனுவுக்கு பலத்த பின்னடைவாக அமையும் என மஇகா – சங்கப்பதிவகம் இடையிலான வழக்கை கவனித்து வரும் வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

பழனிவேலுவின் இடைக்கால மனு மீதான விசாரணை ஜூலை 10ஆம் தேதி நடைபெறவுள்ளது.

2009 மத்திய செயலவையை அங்கீகரித்து சங்கப் பதிவகம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றம் சென்றுள்ளார் பழனிவேல். இந்நிலையில் தனது இந்த நிலைப்பாட்டுக்கு முரணாக, அவரே 2009 மத்திய செயலவை கூட்டத்தைக் கூட்டினால், அந்த நடவடிக்கை வழக்கில் அவருக்கு எதிராகத் திரும்பக் கூடும் எனக் கருதப்படுகிறது.

பழனிவேலின் தடை கோரும் மனு விசாரணைக்கு வரும்போது அவரது இந்த நடவடிக்கை அவருக்குப் பாதகமான வாதங்களை எழுப்பக்கூடும்.

இந்நிலையில் மஇகா அரசியல் சாசனத்தின் 91ஆம் பிரிவின்படி பழனிவேல் உள்ளிட்ட 5 பேர் கட்சியின் உறுப்பியத்தை இழந்துவிட்டனர் என்பதில் டாக்டர் சுப்ரா தரப்பு உறுதியாக உள்ளது.

மத்தியச் செயலவையின் ஒப்புதல் இன்றி 15 உறுப்பினர்களைப் பழனிவேல் இடைநீக்கம் செய்திருப்பதால், அந்த உத்தரவு சட்டப்படி செல்லாது என்றும் சுப்ரா தரப்பு தெரிவிக்கிறது.

மேலும் 15 பேரை இடைநீக்கம் செய்தபோது பழனிவேல் மஇகாவின் அடிப்படை உறுப்பினர் பதவியை இழந்துவிட்டதாகவும் சுப்ரா தரப்பு சுட்டிக் காட்டுகிறது.