மும்பை, ஜூன் 25 – மும்பை தாமன் தீவின் அருகில் கடலில் மூழ்கிக்கொண்டிருந்த வர்த்தகக் கப்பல் ஒன்றில் இருந்து 14 பணியாளர்களை, இந்தியக் கடற்படையும், கடலோரக் காவல் படையும் அதிரடியாக மீட்டனர்.
கடந்த திங்கள் கிழமை மும்பை அருகே பால்கர் மாவட்டம் வசாய அருகில் வர்த்தகக் கப்பல் ஒன்று மூழ்கியது. அந்தக் கப்பலில் இருந்து 20 மாலுமிகளையும் இந்தியக் கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர்.
இந்த நிலையில் நேற்று காலை தமானில் இருந்து 24 கடல் மைல் தொலைவிலும், மும்பையில் இருந்து 75 கடல் மைல்களுக்கப்பால் ஒரு கப்பல் கடலில் மூழ்கியது.
அந்தக் கப்பல் மூழ்கத் தொடங்கியதும், அதில் இருந்து உதவி கோரி அவசர அழைப்பு வந்ததாகக் கடற்படையின் மக்கள் தொடர்பு அதிகாரியான டி.கே.சர்மா கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது: “எம்.வி.கோஸ்டல் பிரைட் என்ற இந்தக் கப்பல் சிமெண்ட் ஏற்றிச் செல்லும் கப்பல் ஆகும். இந்தக் கப்பலில் 14 பணியாளர்கள் இருந்தனர். அவர்களை மீட்க உடனடியாகக் கடற்படை ஒரு சீ கிங் ஹெலிகாப்டரை அனுப்பியது”.
“கடலோரக் காவல் படையினர் இரு ஹெலிகாப்டர்களை அனுப்பினர். கப்பல் படை ஹெலிகாப்டர் நேற்று காலை 7.58 மணிக்குக் கொலாபாவில் இருந்து அனுப்பப்பட்டது. கடலோரக் காவல் படையின் ஹெலிகாப்டர்கள் நேற்று காலை 8.40 மணிக்கு அனுப்பி வைக்கப்பட்டன”.
“அவற்றில் ஒரு ஹெலிகாப்டர் கப்பலில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த 6 பேரைப் பத்திரமாக மீட்டது. அந்தக் கப்பல் மூழ்கத் தொடங்கியவுடன் அதில் இருந்த பணியாளர்களில் 8 பேர் உயிர் தப்புவதற்காகக் கடலில் குதித்தனர்”.
“நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த அவர்களில் 6 பேரை மற்றுமொரு ஹெலிகாப்டர் உயிருடன் மீட்டது. நீரில் தத்தளித்த மேலும் 2 பேரைக் கடலோரப் பாதுகாப்புப் படையினர் மீட்டனர். மூழ்கிய கப்பலில் இருந்த 14 பணியாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு உமர்காவ் கொண்டு வரப்பட்டனர்” எனக் கூறினார் அவர்.