கராச்சி, ஜுன் 25 – பாகிஸ்தானில் வெயிலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 1200-ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், கடந்த வாரத்தில் இருந்து, கடும் வெயில் (113 டிகிரி) சுட்டெரிக்க தொடங்கியது.
அத்துடன், அனல் காற்றும் வீசி வருவதால், பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, முதியோர்களால் இந்த வெயிலை தாங்கிக் கொள்ள முடியவில்லை.
கடந்த சில நாட்களாக, நூற்றுக் கணக்கானோர் சுருண்டு விழுந்து பலியான நிலையில், நேற்றுடன் பலியானோர் எண்ணிக்கை 1200-ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக, சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் மட்டும் சுமார் 1000 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாகாணத்தின் மற்ற பகுதிகளில் பலி எண்ணிக்கை 200-ஆக உள்ளது. இதற்கிடையே, வெயிலை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள், சாலையில் சுருண்டு விழுந்து விடுகின்றனர்.
அவர்களுக்கு முதலுதவி செய்வதற்காக, பல்வேறு இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பணியில், துணை ராணுவ படையினர் ஈடுபட்டுள்ளார்கள்.
மேலும், வெயிலின் உக்கிரம் குறையும் வரை, பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க வேண்டாம் என, சிந்து மாகாண முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அதே சமயம், மருத்துவமனை போன்ற, அத்தியாவசிய தேவை அலுவலகங்கள் திறந்தே இருக்கும். இன்னும் சில தினங்களில், வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என்று, அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.