கோலாலம்பூர், ஜூன் 26 – தாம் இன்னும் மஇகா உறுப்பினராக நீடிப்பதாகவும், தாம் கட்சி உறுப்பியத்தை இழந்துவிட்டதாக அறிவிக்கும் சங்கப்பதிவகக் கடிதம் ஏதும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என்றும் டத்தோஸ்ரீ ஜி. பழனிவேல் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 20ஆம் தேதி நடைபெற்ற ஆதரவுப் பேரணியில் பழனிவேல்..
மஇகா உறுப்பினர் தகுதியைத் தாம் இழந்துவிட்டதாக ஒரு தரப்பினர் கூறுவதைத் தாம் அறிந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
“இது உறுதி செய்யப்பட்ட தகவல் அல்ல. இது தொடர்பான கடிதம் எதுவும் எனக்குக் கிடைக்கவில்லை. இதுகுறித்துக் கருத்துச் சொல்ல விரும்பவில்லை. தேவைப்பட்டால் இவ்விவகாரத்தைப் பின்னர் எதிர்கொள்வேன்,” என்று வியாழக்கிழமை நடைபெற்ற 2009ஆம் ஆண்டுத் தேர்வு செய்யப்பட்ட மத்தியச்ந் செயலவையின் அவசரக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பழனிவேல் தெரிவித்தார்.
தாம் கட்சி உறுப்பியத்தை இழந்துவிட்டதாக கூறப்படுவதை உறுதி செய்யுமாறு சங்கப் பதிவகத்திடம் கேட்கப் போவதில்லை என்று குறிப்பிட்ட அவர், இது வெறும் வதந்தி எனக் கருதிப் புறந்தள்ளப் போவதாகக் கூறினார்.
கட்சித் தேர்தல் தொடர்பில் பிரதமரை விரைவில் சந்தித்து ஆலோசனை நடத்த இருப்பதாகக் கூறிய அவர், ஏற்கெனவே செவ்வாய்க்கிழமை பிரதமரைச் சந்தித்தபோது இதுகுறித்து விவரித்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
“பிரதமர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது கட்சித் தேர்தலை நடத்துவது குறித்த பரிந்துரையை அளித்துள்ளேன். அதை அவர் பரிசீலிப்பார். அவர் ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம். அநேகமாக அவர் ஒப்புக் கொள்வார். அதற்காகக் காத்திருப்போம். தேர்தல் நடத்தப்படும் என்றாலும், எதையும் இன்னும் உறுதி செய்யவில்லை,” என்றார் பழனிவேல்.
மறுதேர்தல் குறித்த டத்தோஸ்ரீ சுப்ரமணியத்தின் திட்டங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பழனிவேல், தாம் கட்சியின் தேசியத் தலைவராக நீடிக்கும்போது அவரால் தேர்தலை நடத்த முடியாது என்றார்.
“டாக்டர் சுப்ரமணியம் இடைக்காலத் தலைவரா? நான் தலைவராக இருக்கும்போது அவர் எப்படி தற்காலிகத் தலைவராக இருக்க முடியும்?” என்றும் பழனிவேல் கேள்வி எழுப்பினார்.
இதற்கிடையே வியாழக்கிழமை நடைபெற்ற மத்தியச் செயலவைக் கூட்டத்தில், கட்சி விவகாரங்கள் தொடர்பில் நீதிமன்றத்தை அணுகிய பழனிவேல் உள்ளிட்டோர் கட்சி உறுப்பினர்களாக நீடிப்பதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.