கோலாலம்பூர், ஜூன் 29 – மஇகா 2009 இடைக்கால மத்திய செயலவைக் கூட்டத்தை இன்று நடத்திய மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல், கட்சித் தலைமையகத்தை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது உள்ளிட்ட 6 தீர்மானங்களை அறிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் 3 மணியளவில் டைனஸ்டி தங்கும்விடுதியில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு அந்த 6 தீர்மானங்களையும் வாசித்த பழனிவேல், மஇகா தலைமையகத்தை “சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து” உடனடியாக மீட்க மஇகா மத்தியச் செயற்குழு முடிவெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் மற்றும் அவரது குழுவினரைச் சுட்டிக் காட்டிய பழனிவேல், அவர்கள் அக்கட்டிடத்தில் சட்டவிரோதமாகச் செயல்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், “மஇகா தலைமையகத்தை உடனடியாக மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மஇகா பொதுச்செயலாளர் டத்தோ எஸ்.சோதிநாதன் எடுப்பார்” என்றும் பழனிவேல் கூறியுள்ளார்.
இன்று நடைபெற்ற கூட்டத்தில் சுமார் 500 ஆதரவாளர்கள் கலந்து கொண்டதாகக் கூறப்படுகின்றது.
மேலும், 2009 இடைக்கால மத்திய செயலவை, கட்சியின் சொத்துக்களான ஏய்ம்ஸ்ட், மைஎட், டேஃப் கல்லூரி, கோப் டிடிக், யாயாசான் பெமுலிஹான் சோசியல் மற்றும் கட்சிக்குச் சொந்தமான இதர சொத்துக்களை மீட்டெடுக்க ஒப்புக்கொண்டுள்ளது என்றும் பழனிவேல் தெரிவித்துள்ளார்.
இதற்கென சிறப்புக் குழுவினர் அமர்த்தப்பட்டு, இந்த விவகாரங்கள் அனைத்தையும் கவனித்துக் கொள்வார்கள் என்றும் பழனிவேல் குறிப்பிட்டுள்ளார்.
கட்சித் தேர்தல்களைப் பொறுத்த வரையில், ஜூலை 15 மற்றும் 16 தேதிகளில் கிளைத்தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் என்றும், ஜூலை 24 முதல் 26 வரையில் தேர்தல் நடைபெறும் என்றும் பழனிவேல் அறிவித்துள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் தேசியத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என்றும் பழனிவேல் அறிவித்துள்ளார்.
பழனிவேல் தனது உறுப்பினர் தகுதியை இழந்துவிட்டதாகச் சங்கப்பதிவிலாகா அறிவித்துள்ளது குறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், தனது குழுவினர் விரைவில் அப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வருவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
நாளை டத்தோ சோதிநாதன், சங்கப்பதிவிலாகாவுடன் சந்திப்பை மேற்கொண்டு இப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பார் என்றும் பழனிவேல் உறுதியளித்துள்ளார்.