கோலாலம்பூர், ஜூன் 30 – மஇகா விவகாரங்கள் தொடர்பாக இனி எந்த ஒரு கடிதத்தையும் சங்கப்பதிவிலாகா அனுப்பாது என அதன் தலைமை இயக்குநர் டத்தோ முகமட் ராசின் அப்துல்லா கூறியுள்ளார்.
இது குறித்து கடந்த ஜூன் 25-ம் தேதி மஇகா பொதுச்செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“மஇகா-வுடன் வழக்கு இருப்பதால், இனி எந்த ஒரு கடிதமும் அனுப்பமாட்டோம்” என்று முகமட் ராசின் ‘தி ஸ்டார்’ இணையத்தளத்திடம் கூறியுள்ளார்.
அந்த கடிதத்தில், டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் மற்றும் குழுவினர் கடந்த ஜூன் 17-ம் தேதி சங்கப்பதிவிலாகாவிற்கு அனுப்பிய கடிதத்தில், எழுப்பப்பட்டிருந்த முக்கியப் பிரச்சனைகளுக்கு, விளக்கமளிக்கும் வகையில் பதிலளிக்கப்பட்டுள்ளதாக முகமட் ராசின் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், டாக்டர் எஸ்.சுப்ரமணியம் இடைக்காலத் தலைவராகச் செயல்படுவது, மஇகா சட்டவிதி 91-ன் படி, டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தனது உறுப்பினர் தகுதியை இழந்தது உள்ளிட்டவைகள் அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாகவும் முகமட் ராசின் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
டாக்டர் சுப்ரமணியம் அளித்த 2009 இடைக்கால மத்தியச் செயலவை உறுப்பினர்கள் 31 பேரின் பட்டியலையும் அக்கடிதம் அங்கீகரிப்பதாகவும், அவர்கள் தான் மஇகா மறுதேர்தலை நடத்தும் பொறுப்பைக் கொண்டிருக்கின்றனர் என்றும் முகமட் ராசின் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.
அப்படி என்றால், டாக்டர் சுப்ரமணியம் இடைக்காலத் தலைவராகச் செயல்பட அங்கீகாரம் வழங்கியுள்ளீர்களா? என்ற கேள்விக்குப் பதிலளித்துள்ள முகமட் ராசின், “அந்தக் கடிதம் அதைப் பற்றித் தான் பேசுகின்றது” என்று தெரிவித்துள்ளார்.
“அந்தக் கடிதத்தை வைத்து தான் மஇகா உறுப்பினர் மற்றும் அலுவலக நிர்வாகம் குறித்த எங்களின் ஆவணங்களைப் புதுப்பித்துள்ளோம்” என்றும் முகமட் ராசின் அப்துல்லா தெரிவித்துள்ளார்.