புது டெல்லி, ஜூன் 30 – மேகிக்கு எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து முழித்துக் கொண்ட இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம், உணவு உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளையும் கெடுபிடிகளையும் விதித்து வருகிறது.
மேகிக்குக் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியதால், தனது நூடுல்ஸ் தயாரிப்பினை நெஸ்லே நிறுவனம் திரும்பப் பெற்றுக் கொண்ட நிலையில், ஜப்பானைச் சேர்ந்த இண்டோ நிஸ்ஸின் நிறுவனமும் தனது டாப் ராமென் நூடுல்ஸை இந்தியாவில் திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது.
தங்களது நூடுல்ஸ் தயாரிப்புகள் திரும்பப் பெற்றது குறித்து இண்டோ நிஸ்ஸின் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் கெளதம் ஷர்மா கூறுகையில், “இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணைய அதிகாரிகள் எங்களது தயாரிப்புகளைப் பரிசோதித்து விட்டு, அவர்கள் அனுமதி அளிக்கும் வரை டாப் ராமென் நூடுல்ஸ்களைத் திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொண்டனர். அதன் காரணமாகவே நாங்கள் எங்களது தயாரிப்பினைத் திரும்பப் பெற்றுக் கொண்டோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மாதத்தின் தொடக்கம் முதல் மீண்டும் மேகி போன்ற சர்ச்சைகள் எழுந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்து வரும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம், வெளிநாட்டு நிறுவனங்களின் உணவுப் பொருட்கள் குறிப்பாக நூடுல்ஸ், பாஸ்தா மற்றும் குளிர்பான வகைகளின் தரத்தினைப் பரிசோதிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.