புது டெல்லி – நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ் மீதான தடை நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் கைகூடி வந்துள்ளன. மேகி பாதுகாப்பானதா? என்பது தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றம் மூன்று ஆய்வகங்களில் மேற்கொள்ளச் செய்த ஆய்வில், மேகி நூடுல்ஸ் சாப்பிடுவதற்கு பாதுகாப்பானது தான் என நிரூபணமாகியுள்ளது. இதனை நெஸ்லே நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம், நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ் மீது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டது. மக்கள் விரும்பி சாப்பிடும் அந்த நூடுல்சில் அளவுக்கு அதிகமாக காரீயம், மோனோ சோடியம் குளுட்டாமேட் போன்ற ரசாயனங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வக சோதனைகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயன பொருட்கள் அதிகம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால், மத்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் (FSSAI) நாடு முழுவதும் மேகி நூடுஸ்சிற்கு தடை விதித்து. இந்நிலையில், இது தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மேகி நூடுல்சின் மாதிரிகள், அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது.
அதன்படி, நடந்த ஆய்வில், மேகி நூடுல்ஸ் பாதுகாப்பானது தான் என நிரூபணமாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து விரைவில் மேகியை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவர நெஸ்லே நிறுவனம் பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறது.