Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: “ருத்ரமாதேவி” – பாகுபலியில் பாதிதான்! இருந்தாலும் பார்த்து வைக்கலாம்!

திரைவிமர்சனம்: “ருத்ரமாதேவி” – பாகுபலியில் பாதிதான்! இருந்தாலும் பார்த்து வைக்கலாம்!

780
0
SHARE
Ad

Rudhramadeviகோலாலம்பூர் – பாகுபலி  படம் வெளிவந்த பின்னர் திரைகாணும் சரித்திர, புராணப் படங்கள் அனைத்தும் ஒரு பெரும் பிரச்சனையை எதிர்நோக்குகின்றன. அந்தப் படங்களை பாகுபலியோடு இரசிகர்கள் ஒப்பிட்டுப் பார்க்கும் பிரச்சனைதான் அது. அந்த அளவுக்கு பாகுபலி தயாரிப்பு அம்சங்களில் தென்னிந்திய திரையுலகை உச்சிக்குக் கொண்டு சென்று விட்டது.

இன்று வெளியாகி இருக்கும் ருத்ரமாதேவிக்கும் அதே பிரச்சனைதான்.

காட்சிகளில் பிரம்மாண்டம், துல்லியமான வண்ணமயமான ஒளிப்பதிவு, தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களின் அணிவகுப்பு, கோட்டை கொத்தளங்களுடன் கூடிய அரங்க அமைப்புகள், நூற்றுக்கணக்கான நடிகர்கள், குதிரைகள் கொண்ட அனல் பறக்கும் சண்டைக் காட்சிகள் இப்படி எல்லாம் இருந்தும் படம் பார்த்து விட்டு வெளியே வரும்போது பாகுபலி அளவுக்கு இல்லையே என்ற எண்ணம்தான் நமக்கும் ஏற்படுகின்றது.

#TamilSchoolmychoice

அதற்கு முக்கியக் காரணம் தொய்வான, கொஞ்சம் மெதுவோட்டமாக அமைந்த திரைக்கதை.

கதை – திரைக்கதை 

Rudhramadevi - Anushkaபெண் சிசு கொலை பிரதானமாகப் பேசப்படும் இந்தக் காலத்தில் மன்னர் ஆட்சி காலத்திலேயே பெண் குழந்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்கள் எப்படி வளர்க்கப்பட வேண்டும் என்பதை மையமாக வைத்து கதை பின்னியிருக்கின்றார்கள்.

அந்தக் கதையையும், இத்தாலிய வணிகனும், பல நாடுகளுக்குப் பயணம் செய்த கடலோடியுமான மார்க்கோ போலோவின் வாயால் சொல்ல வைத்திருப்பதும் ஒரு வித்தியாசம்தான்.

காகதீய நாட்டின் மன்னர் கணபதி தேவருக்கு குழந்தை பிறக்கவிருக்கும் வேளையில், அந்தக் குழந்தை பெண் குழந்தையாக இருந்தால், நாட்டை அபகரித்துக் கொள்ள மன்னரின் சகோதரர்கள் (சுமன் மற்றும் ஆதித்ய மேனன்) திட்டம் தீட்டுகின்றார்கள்.

Rudhramadevi -2நீண்ட கால பகைமை பாராட்டும் எதிரி நாடான தேவகிரியின் மன்னனோ, பெண் குழந்தை பிறந்தால், காகதீய நாட்டின் மீது போர்தொடுத்து அந்நாட்டைக் கைப்பற்ற முழக்கமிடுகின்றான். நாட்டு மக்களும் தங்களுக்கு இளவரசன்தான் பிறக்க வேண்டும் என எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள்.

ஆனால், பிறப்பதோ பெண்குழந்தை! அவள்தான் ருத்ரமாதேவி!

நாட்டின் சூழலையும், நாட்டைச் சூழ்ந்துள்ள பிரச்சனைகளையும் நன்கு அறிந்து கொள்ளும் காகதீய நாட்டு மன்னரின் மதியூக அமைச்சர் சிவ தேவய்யா (பிரகாஷ்ராஜ்) ஒரு யுக்தி செய்கின்றார். பிறந்தது ஆண் குழந்தைதான் என்றும் அதன் பெயர் ருத்ரதேவன் என்றும் அறிவித்து விடுகின்றார்.

பிரச்சனைகளும் தணிகின்றன.

பெண் குழந்தையை காட்டில் ஒரு தனியிடத்தில் வைத்து ஓர் ஆணுக்குரிய சகல வீர, தீரங்களையும் கற்றுக் கொடுத்து வளர்க்கின்றார்கள். இருந்தாலும் வயதுக்கு வரும் சூழ்நிலையில், தான் ஒரு பெண் என்பதை உணர்கின்றாள் ருத்ரமாதேவி.

Rudhramadevi -3அமைச்சரும், தந்தையும், ஏன் ஓர் ஆணாக அவளை வளர்க்க வேண்டிய சூழ்நிலை நேர்ந்தது என்பதை விளக்க, அதைப் புரிந்து கொள்ளும் ருத்ரமாதேவி, தொடர்ந்து ஆணாகவே வாழ்க்கையைத் தொடரப் போவதாகக் கூறிவிட்டு, இளவரசனுக்குரிய அத்தனை போர்ப் பயிற்சிகளையும் பெற்று வீராங்கனையாக உயர்கின்றாள்.

கால ஓட்டத்தில் உண்மை வெளிப்படுகின்றது. நாட்டின் மூத்த ஆலோசகர்கள் அவளுக்குத் தண்டனை என்று கூறி அவளை நாடு கடத்துகின்றார்கள். அதனைப் பயன்படுத்திக் கொண்டு மன்னரின் கெட்ட எண்ணம் கொண்ட சகோதரர்கள் மீண்டும் நாட்டை அபகரிக்க முயல, எதிரி நாட்டு மன்னன் படையெடுத்து வர – மக்களோ அவளிடம் மீண்டும் சென்று தங்களைக் காப்பாற்றுமாறு வேண்டுகோள் விடுக்க – அவளும் தனது வீரப் பிரதாபங்களால்  நாட்டை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றுகின்றாள்.

Rudhramadevi - Anushka - 5அவளது போராட்டத்துக்கு உதவுகின்றார்கள் – அவளது காதலனும் வீரனுமான சாளுக்கிய வீரபத்திரன் (ராணா டகுபதி) – ருத்ரமாதேவியின் இளவயது நண்பன் கோட்டை சண்டிவீரன் என்று அழைக்கப்படும் கோனா கன்னா ரெட்டி ஆகியோர்.

குழப்பமில்லாத கதைதான் என்றாலும், கதையைக் குழப்புவது பெயர்கள்தான். சம்பந்தா சம்பந்தமில்லாமல், கதாபாத்திரங்களுக்குப் பெயர் வைத்திருப்பதால் அதனை நினைவில் வைப்பதற்கு இரசிகர்கள் நிச்சயம் சிரமப்படுவார்கள்.

அடுத்தது தொய்வான திரைக்கதை. கொஞ்சம் மெதுவோட்டமாக நகர்கின்றது. அதற்கேற்ப பாடல்களையும் மெதுவாக நகர்வது போல் இசையமைத்திருக்கின்றார் இளையராஜா.

கதையைக் கொஞ்சம் விறுவிறுப்பாக்கி, திரைக்கதையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும்.

படத்தின் பலம் – சிறப்புகள்

படத்தின் முக்கிய பலம் அதன் நடிகர்கள்தான். அனுஷ்காவின் அழகும் கவர்ச்சியும் படத்தை இரசிகர்கள் கண்கொட்டாமல் பார்ப்பதற்கு உதவியிருக்கின்றது. வாள் எடுத்து சுழற்றும் சண்டைக் காட்சிகளில் ஏனோ முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு – டென்ஷனாக இருக்கின்றார் அனுஷ்கா.

மற்றபடி வெறும் கச்சை கட்டி வரும் காட்சிகளில் இரசிகர்களை பெருமூச்சு விட வைக்கிறார்.

பிரகாஷ்ராஜ், சாதாரண நடிப்புதான் என்றாலும், டப்பிங்கில் அவருடைய குரல் இல்லை என்பதால் அவரது கதாபாத்திரம் படத்தோடு ஒட்ட மறுக்கின்றது. டப்பிங்குக்கான சம்பளப் பிரச்சனையோ என்னவோ தெரியவில்லை. வேறு யாரோ அவருக்குக் குரல் கொடுத்திருக்கின்றார்கள்.

படத்தை இரசிக்கும் படி செய்திருக்கும் மற்றொருவர் அல்லு அர்ஜூனா. கோட்டை சண்டி வீரனாக வரும் அவர், நான்தான் கோனா கன்னா ரெட்டி என அடிக்கடி கூறுகின்ற தோரணையும், வித்தியாசமான உருவத் தோற்றத்தோடு கூடிய நடிப்பும் பாராட்ட வைக்கின்றது.

இப்போதுதான் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் ராதிகா வாயால் ‘ரெட்டி-ரெட்டி’ என்ற வார்த்தையை அடிக்கடி கேட்ட இரசிகர்கள் இந்தப் படத்திலும் அந்த வார்த்தையை மீண்டும் கேட்கலாம்.

Rudhramadevi - anushka-nithya menon-catherine theresaஅனுஷ்காவின் கவர்ச்சி போதாது என்று, இன்னும் இரண்டு பெண் கதாபாத்திரங்களை நித்யா மேனன் (ஓகே கண்மணி, காஞ்சனா-2 புகழ்), கேத்திரின் தெரசா (மெட்ராஸ் படத்தின் கதாநாயகி) உலவ விட்டு மன்னராட்சி கால கவர்ச்சித் தோரணம் கட்டியிருக்கின்றார்கள். அவர்களால்தான் சில இடங்களில் பார்க்கும்படி படம் களை கட்டுகின்றது என்பது வேறு விஷயம்.

அவர்கள் மூவரும் இணைந்து, அரண்மனைக் குளத்தில் குளித்தவாறு பாடும் பாடல் காட்சியும் உண்டு.

டாணா டகுபதி, பாகுபலியில் பார்த்த மாதிரி அதே கட்டுமஸ்தான உடம்புடன் மிரட்டுகின்றார். தனது கதாபாத்திரத்தை கச்சிதமாகச் செய்திருக்கின்றார்.

படத்தின் மற்றொரு பலம் துல்லியமான ஒளிப்பதிவு. படத்தோடு ஒன்றச் செய்யும் அளவுக்கு, மன்னராட்சிக்கே உரிய பிரம்மாண்டத்தையும், வண்ணமயமான அரண்மனை மற்றும் வெளிப்புறக்காட்சிகளையும் பதிவு செய்திருக்கின்றார் ஒளிப்பதிவாளர் அஜயன் வின்சென்ட்.

படத்தின் பலவீனங்கள்

முன்பு கூறியதுபோல, தொய்வான, கொஞ்சம் போரடிக்கின்ற வகையில் திரைக்கதை நகர்வது சில சமயங்களில் சோர்வைத் தருகின்றது.

படத்தில் எங்கேயும் திருப்பங்கள் இல்லாமல் இருப்பதும், கதாபாத்திரங்கள் அதிகமாக வசனங்களை மட்டுமே பேசிக் கொண்டிருப்பதும் படம் மெதுவாகச் செல்கின்றது என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கின்றது.

rudrama-devi-movie-anushka-வசனங்களையும் பாடல்களையும் எழுதியிருப்பது பாடலாசிரியர் பா.விஜய். வசனங்களில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

“கம்முனு கெட – கம்முனு இருடா” என்றெல்லாம் மன்னர் ஆட்சி காலத்தில் பேசியிருப்பார்களா என யோசிக்க வைத்திருக்கின்றார் வசனகர்த்தா விஜய். அதே போல அல்லு அர்ஜூனா அடிக்கடி “என் அர்ணாக் கொடியில தாயத்து…” என்று சொல்வதும் கர்ண கடூரமாக ஒலிக்கின்றது.

கிராபிக்ஸ் காட்சிகளில், அமெச்சூர்த்தனமும், செயற்கைத் தனமும் பட்டவர்த்தனமாகத் தெரிகின்றது. செயற்கை யானை எது, உண்மை யானை எது என்பதை ஒரே பார்வையில் தெரிந்து கொள்ள முடிவது கிராபிக்ஸ் காட்சிகளின் பலவீனம்.

அதே போல, சண்டைக் காட்சிகளில் சில இடங்களில் பழைய படங்களைப் போல் திரைச் சுருளை வேகமாக ஓட்டிக்காட்டுவதும் பளிச்செனத் தெரிகின்றது. குதிரையோட்டக் காட்சிகளிலும் அதே நிலைமைதான்.

இயக்குநர் குணசேகர் கடும் உழைப்பைக் கொட்டியிருந்தாலும், இதுபோன்ற கவனக் குறைவுகளைத் தவிர்த்திருக்கலாம்.

இசை இளையராஜா! அவரது இசையைப் பற்றி விமர்சிக்கும் அருகதை நமக்கில்லை. இருந்தாலும், பின்னணி இசையும் பாடல்களும் மனதை வசீகரிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அவ்வளவு பெரிய நடிகர் விஜயகுமாரை, ஓரிரு காட்சிகளில் கூட்டத்தோடு கூட்டமாக உட்கார்ந்திருப்பதற்கும், மன்னர் வாழ்க என்று ஓரிரு வார்த்தைகள் கூறுவதற்கு மட்டும் பயன்படுத்தியிருப்பது கொடுமை.

ருத்ரமாதேவியின் கதையைக் கூறும் இத்தாலிய கடலோடி மார்க்கோ போலோ, இறுதியில் தனது நாட்டு மன்னருக்குக் கூறும் அறிவுரையாக, ஒருவருக்குப் பெண் குழந்தை பிறப்பதில் தவறில்லை, அவளை எப்படி வளர்க்கின்றோம் என்பதுதான் முக்கியம் எனக் கூறி முத்தாய்ப்பு வைப்பது இரசிக்கத்தக்க முடிவு.

எந்தவித எதிர்பார்ப்புகளோடும் திரையரங்கில் நுழையாமல் – பாகுபலியோடு ஒப்பிடாமல் – பார்த்தால்,

அனுஷ்காவுக்காகவும், பிரம்மாண்டமான காட்சிமைப்புகளுக்காகவும் ருத்ரமாதேவி நமக்கு ரசனை விருந்து படைக்கவே செய்கின்றாள்.

-இரா.முத்தரசன்