Home அவசியம் படிக்க வேண்டியவை ஈரான் ஒப்பந்தத்தில் அப்படி என்ன தான் உள்ளது?

ஈரான் ஒப்பந்தத்தில் அப்படி என்ன தான் உள்ளது?

522
0
SHARE
Ad

iranகோலாலம்பூர், ஜூலை 14 – “வல்லவனுக்கு வல்லவன் உலகில் உண்டு” என்பதைப் போல, உலகை ஆள நினைக்கும் மேற்கத்திய நாடுகளை, குறிப்பாக அமெரிக்காவை தனது அணுஆயுதங்களால் மிரட்டி, பாடாய்ப்படுத்திய ஈரானை, நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டு வந்துள்ள ஒப்பந்தம் தான் ஈரான் ஒப்பந்தம்.

நாட்டின் வளர்ச்சி, மின் உற்பத்தி ஆகிய காரணங்களுக்காக அணுசக்தி திட்டத்தை தொடங்குகிறோம் என்று கூறி, ஈரான் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அணுசக்தி தயாரிப்பைத் தொடங்கியது. இந்த திட்டத்திற்கு ஆசிய நாடுகளான சீனாவும், பாகிஸ்தானும் ஆதரவு அளித்தன. ஆனால், அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும், ஈரான் அணுஆயுதங்களுக்காகவே இந்த திட்டத்தை தொடங்கியதாக கடுமையான எதிர்ப்பு தெரிவித்தன. ஈரானை வழிக்கு கொண்டு வருவதற்காக பல்வேறு பொருளாதாரத் தடைகளையும் விதித்தன.

இந்த நிலையில் தான், ரஷ்ய அதிபர் புதினும், இஸ்ரேலிய தலைவர்களும் சமாதானப் பேச்சுவார்த்தையின் பேரில் மேற்கத்திய நாடுகளுக்கும், ஈரானுக்கு இடையில் புதிய ஒப்பந்தம் பற்றி பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினர். ஆரம்பத்தில், தனது திட்டத்தில் உறுதியாக இருந்த ஈரான் பொருளாதார பிரச்சனைகளாலும், ஒபாமாவின் இரண்டரை வருட முயற்சியாலும் இன்று இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

#TamilSchoolmychoice

IRAN-NUCLEARஇந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய விவரங்கள்:

* ஈரானின் அணுசக்தி தொடர்பான அனைத்து நடவடிக்கைளும் சுதந்திரமாக நடத்தப்படும். ஆனால், ஒவ்வொரு அணுசக்தி நடவடிக்கைகளையும் ஐ.நா.சபையின் ஆய்வாளர்கள் கண்காணிப்பர். இது சுமார் 20 வருடங்களுக்கு தொடரும்.

* அணுக்கிடங்கில் இருந்து 98 சதவீத யுரேனியம் விடுவிக்கப்படும்.

* ஈரானின் சென்டிரிஃபியூஜ்கள் (அணுப்பிரிக்கும் அலகுகள்) மூன்றில் இரண்டு பங்கு குறைக்கப்படும்.

* இதன் மூலம் ஈரானில் அணுஆயுதங்களின் தயாரிப்பு கட்டுக்குள் வைக்கப்படும். ஒரே ஒரு அணுகுண்டு தயாரிக்க ஒருவருட காலம் ஆகலாம். (ஆனால், இதற்கும் அமெரிக்காவின் அனுமதி அவசியப்படலாம்)

அமெரிக்காவிற்கும், ஒபாமாவிற்கும் இந்த ஒப்பந்தம் மிகச் சிறப்பான பெயரை பெற்றுத் தரும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. ஈரானுக்கும் இந்த ஒப்பந்தத்தால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படலாம்.

எனினும், இந்த ஒப்பந்தம் அணு ஆயுதங்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்ற சிறந்த நோக்கத்திற்காக மட்டுமே இருக்க வேண்டும் என்பது உலக மக்களின் எண்ணமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல், அணுஆயுத ஒழிப்பு பற்றி சொல்பவர்கள் முதலில் தங்களிடமிருந்து இந்த சீர்த்திருத்தை தொடங்க வேண்டும். ஆனால், இது பற்றி அமெரிக்காவிடம் யாரால் கேள்வி கேட்க முடியும்? பூனைக்கு யார் மணி கட்டுவர்?

– சுரேஷ்