கோலாலம்பூர், ஜூலை 15 – மூத்த வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமட் ஷாபி அப்துல்லா, தனது வழக்கறிஞர் தொழில் தொடர்புடைய பணிகளில் முறைதவறி நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டை சுமத்தி அவர் மீது காரணம் கோரும் கடிதம் ஒன்றை மலேசிய வழக்கறிஞர் மன்றம் அனுப்பியுள்ளது.
இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதை வழக்கறிஞர் மன்றத் தலைவர் ஸ்டீவன் திரு உறுதிப்படுத்தியுள்ளார்.
அந்தக் கடிதத்தைத் தொடர்ந்து எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கை விசாரணைகள் ரகசியமாக கையாளப்படும் என்றும் அதனால் அது குறித்து பகிரங்கமாக விவாதிக்க முடியாது என்றும் ஸ்டீவன் திரு தெரிவித்துள்ளார்.
அன்வாரின் வழக்கு முடிந்து அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட பின்னர், அன்வாரின் குற்றம் தொடர்பாக பகிரங்கமாக உரைகள் நிகழ்த்திய காரணத்திற்காக முகமட் ஷாபி மீது, தொழிலில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கடந்த மார்ச் 14ஆம் தேதி நடைபெற்ற வழக்கறிஞர் மன்ற ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் முன்னாள் மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டான்ஸ்ரீ வி.சி.ஜோர்ஜ் மற்றும் வழக்கறிஞர் டோம்மி தோமஸ் ஆகிய இருவரும் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்திருந்தனர். இந்த தீர்மானத்தை பிப்ரவரி 10ஆம் தேதி அவர்கள் இருவரும் சமர்ப்பித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, வழக்கறிஞர் மன்றம், டோம்மி தோமஸ், வி.சி.ஜோர்ஜ் ஆகியோர் மீது ஷாபி அப்துல்லா கடந்த மார்ச் 13இல் அவதூறு வழக்கொன்றைத் தொடுத்திருந்தார்.
அன்வாரின் ஓரினப் புணர்ச்சி வழக்கு தொடர்பான தனது தொழில்முறை நடவடிக்கைகளைப்பற்றி வழக்கறிஞர் மன்ற ஆண்டுக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என வழக்கறிஞர் மன்றத்திற்கு எதிரான ஒருசார்பு (ex-parte) தடையுத்தரவு ஒன்றை ஷாபி அப்துல்லா நீதிமன்றத்தில் பெற்றார்.
இனி ஷாபி மீதான காரணம் கோரும் கடிதம் தொடர்பான விளக்கங்களை அவர் வழங்கியதும் விசாரணைகள் நடத்தப்பட்டு வழக்கறிஞர் மன்றம் முடிவை வழங்கும்.